Asianet News Tamil

ரிஷப் பண்ட் என்னதான் தவறு செய்தாலும் அவருக்கு ஆதரவா இருப்பது ஏன்..? உருப்படியா ஒரு காரணத்தை சொன்ன தேர்வுக்குழு தலைவர்

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், களத்தில் படுமோசமாக தொடர்ச்சியாக சொதப்பினாலும் அவருக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்படுவதற்கான காரணத்தை தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார். 

msk prasad reveals the reason why selection committee backs rishabh pant
Author
India, First Published Dec 27, 2019, 3:10 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தோனியின் கெரியர் முடிந்துவிட்டதால் இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் உருவாக்கப்பட்டுவருகிறார். ஐபிஎல்லில் அபாரமாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ரிஷப் பண்ட், உள்நாட்டு போட்டிகளில் அதிகம் ஆடிய அனுபவம் இல்லாதவர். ஆனாலும் அவரது திறமை மீது நம்பிக்கை வைத்து இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். 

இந்திய அணியில் எடுக்கப்பட்ட புதிதில் ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் படுமோசமாக இருந்தது. சரி, காலப்போக்கில் அனுபவத்தை பெற்று தேறிவிடுவார் என்று பார்த்தால், அவர் அறிமுகமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் அப்படித்தான் இருக்கிறார். 

பேட்டிங்கில் சொதப்புவது ஒருபுறமிருக்க, விக்கெட் கீப்பிங்கில் சொதப்புவதுதான் அணியை கடுமையாக பாதித்துவிடுகிறது. பந்தை கையிலே பிடிப்பதில்லை. அதே பழக்கத்தில் சில நேரங்களில் கேட்ச்களையும் தவறவிட்டுவிடுகிறார். அது அணிக்கு பெரும் பின்னடைவையும் பாதிப்பையும் ஏற்படுத்திவிடுகிறது. 

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் சொதப்பும்போதெல்லாம், ரசிகர்கள் தோனி தோனி என முழக்கமிட்டு ரிஷப் பண்ட்டை கிண்டலடிக்கின்றனர். தோனியுடன் ரிஷப் பண்ட்டை ஒப்பிட முடியாது, ஒப்பிடவும் கூடாது. ஆனால் ரிஷப் பண்ட் தனக்கான தனித்துவ அடையாளத்தோடு, திறமையை வளர்த்துக்கொண்டு திகழவேண்டும். ஆனால் தொடர்ச்சியாக விக்கெட் கீப்பிங்கில் சொதப்பிவருகிறார். 

கேட்ச்களை தவறவிடுவது, டி.ஆர்.எஸ் எடுப்பதற்கு சரியான ஆலோசனையை வழங்காதது, மோசமான விக்கெட் கீப்பிங் என அவரது விக்கெட் கீப்பிங் மோசமாகிக்கொண்டே தான் செல்கிறது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பேட்டிங்கில் நன்றாக செயல்பட்டு அனைவரது பாராட்டையும் பெற்ற ரிஷப் பண்ட், மூன்றாவது போட்டியில் மட்டும் மொத்தம் 4 கேட்ச்களை கோட்டைவிட்டார். 

ஆனாலும் அவர் தான் இந்திய அணியின் எதிர்கால விக்கெட் கீப்பர் என்பதை அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் உறுதி செய்துவிட்டதால் அவருக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன. அவர் எவ்வளவு தவறு செய்தாலும் அவற்றையெல்லாம் திருத்தி அவரை மேம்பட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதோடு, அதுவரை பொறுமை காக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது அணி நிர்வாகம். 

அதனால் ரிஷப் பண்ட்டுக்கு ஆதரவாகவே அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் இருக்கிறது. அடுத்ததாக இலங்கைக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஆகிய அணிகளிலும் ரிஷப் பண்ட் இடம்பெற்றுள்ளார். அவர் தான் விக்கெட் கீப்பர். ரிஷப் பண்ட் சொதப்புவதால் சஞ்சு சாம்சனுக்கு அணியில் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தாலும், ரிஷப் பண்ட்டுக்குத்தான் தொடர் வாய்ப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன. 

ரிஷப் பண்ட் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த தேர்வுக்குழு தலைவரே, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் அவரது விக்கெட் கீப்பிங்கை பார்த்து செம கடுப்பாகிவிட்டார். இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான தொடர்களுக்கான அணிகளை அறிவித்துவிட்டு ரிஷப் பண்ட் குறித்து பேசிய எம்.எஸ்.கே.பிரசாத், ரிஷப் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். 

”ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்படவில்லை. அவரிடமிருந்து நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு அவர் ஆடவில்லை. ஆனால் ஒரு வீரரை உருவாக்குவதென்றால், அவருக்கு கண்டிப்பாக ஆதரவாக இருக்க வேண்டும். பண்ட் விக்கெட் கீப்பிங்கில் அவரது திறமையை வளர்த்துக்கொண்டு மேம்பட வேண்டும். ஸ்பெஷலிஸ்ட் விக்கெட் கீப்பரிடம் பண்ட்டை பயிற்சியெடுக்க திட்டமிட்டுள்ளோம். எனவே அவர் வருங்காலத்தில் சிறந்து விளங்குவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று பிரசாத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், ஹிந்துஸ்டான் டைம்ஸுக்கு அளித்த பேட்டியிலும் ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ளார். ரிஷப் குறித்து பேசியுள்ள எம்.எஸ்.கே.பிரசாத், பயிற்சி மற்றும் நம்பிக்கை ஆகியவற்றில் உள்ள குறைபாடு, அவருடைய இயல்பான ஆட்டத்தை ஆடாதது என இவையனைத்தும் சேர்ந்துதான் அவர் சரியாக ஆடாததற்கு காரணம். அவர் இளம் வீரர். இன்னும் ஆட்டத்திறனை மேம்படுத்தும் கட்டத்தில்தான் இருக்கிறார். அவர் அதிகமான உள்நாட்டு போட்டிகளில ஆடாமல், நேரடியாக இந்திய அணிக்கு வந்துவிட்டதால் அனுபவம் குறைவு. இதுவும் அவர் சரியாக ஆடாததற்கு ஒரு காரணம். ஆனால் அவர் திறமையான வீரர். அவர் வலுவான கம்பேக் கொடுப்பார் என உறுதியாக நான் நம்புகிறேன். 
 
பேட்டிங்கும் விக்கெட் கீப்பிங்கும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. அவர் விக்கெட் கீப்பிங் சரியாக செய்யவில்லை என்றால், அது அவரது பேட்டிங்கை பாதிக்கும். அதேபோல பேட்டிங் ஆடவில்லை என்றால், அது விக்கெட் கீப்பிங்கை பாதிக்கும். அதனால் அழுத்தமான மனநிலையிலிருந்து மீண்டு ரிலாக்ஸாக இருந்தால் அவரால் ஜொலிக்க முடியும். 

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் அறிமுக டெஸ்ட் தொடரிலேயே சதமடிக்கும் அளவிற்கு திறமையான வீரராக இருக்கிறார். அப்படிப்பட்டவருக்கு கண்டிப்பாக ஆதரவளிக்க வேண்டும். இந்த ஆதரவுகளுக்கெல்லாம் தகுதியான வீரர் அவர் என்று எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios