டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்றுவிதமான போட்டிகளுக்கும் இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் உருவாக்கப்பட்டுவருகிறார். 

தோனி ஓய்வு அறிவிக்கவில்லை என்றாலும் அவருக்கு இனிமேல் அணியில் இடமில்லை என்பது உறுதியாகிவிட்டது. இந்திய அணியின் எதிர்கால விக்கெட் கீப்பர் தேடலில் முதல் வாய்ப்பு ரிஷப் பண்ட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது திறமையை கருத்தில்கொண்டு அவர் சரியாக ஆடாவிட்டாலும் தொடர் வாய்ப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன.

ஆனால் அவர் உலக கோப்பையிலும் சரி, அதற்கு பின்னரும் சரி தொடர்ந்து சொதப்பிவருகிறார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில், டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்றுவிதமான போட்டிகளில் பேட்டிங் சரியாக ஆடவில்லை. அவர் ஸ்கோர் செய்யாமல் அவுட்டாவது கூட பரவாயில்லை. ஆனால் அவர் அவுட்டாகும் விதம் அணி நிர்வாகத்திற்கு சிக்கலாக அமைந்துள்ளது. 

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இஷான் கிஷான் மற்றும் சஞ்சு சாம்சனும் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவருவதால் ரிஷப் பண்ட் மீதான நெருக்கடி அதிகரித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் அணியில் சீனியர் விக்கெட் கீப்பரான சஹா இருக்கும் நிலையில், இந்தியா ஏ மற்றும் உள்நாட்டு போட்டிகளில் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் கேஎஸ் பரத் அபாரமாக ஆடிவருகிறார். எனவே நாளுக்குநாள் ரிஷப் பண்ட் மீதான அழுத்தம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. 

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான  கடைசி டி20 போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகள் ரிஷப் பண்ட்டுக்கு ரொம்ப முக்கியமானவை. டெஸ்ட் அணியில் சஹா இடம்பெற்றிருந்தும் கூட வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான இரண்டு போட்டியிலும் அவருக்கு ஆடும்லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரும் அக்டோபர் 2ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் பிரதான விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தானா என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், பந்து நன்றாக திரும்பும். அதனால் தரமான விக்கெட் கீப்பர் தேவை. யாரை விக்கெட் கீப்பிங் செய்யவைப்பது என்பதை அணி நிர்வாகமே முடிவு செய்யும் என்று எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துவிட்டார்.