IPL 2023: இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்ட தோனி.. வைரல் வீடியோ
ஐபிஎல் 16வது சீசன் தொடங்க இன்னும் இரண்டரை மாதங்கள் உள்ள நிலையில், சிஎஸ்கே கேப்டன் தோனி இப்போதே பேட்டிங் பயிற்சியை தொடங்கிவிட்டார். அந்த வீடியோ வைரலாகி ரசிகர்களை செம உற்சாகமடைய செய்துள்ளது.
ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், 16வது சீசன் வரும் ஏப்ரலில் தொடங்குகிறது. இதுவரை 4 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி, 5வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.
ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்றுள்ள நிலையில், அதற்கடுத்தபடியாக அதிகபட்சமாக 4 முறை கோப்பையை வென்ற, அதிகமுறை ஃபைனலுக்கு முன்னேறிய, 2 சீசன்களை தவிர மற்ற அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு முன்னேறிய அணி என ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக சிஎஸ்கே அணியை வைத்திருப்பவர் தோனி.
ஐபிஎல்லில் 234 போட்டிகளில் ஆடி 4978 ரன்களை குவித்துள்ள தோனி, அடுத்த சீசனுக்கான பயிற்சியை இப்போதே தொடங்கிவிட்டார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த 2020ம் ஆண்டே ஓய்வுபெற்றுவிட்ட தோனி, ஐபிஎல்லில் தனது கடைசி போட்டியை சென்னையில் தான் ஆடுவேன் என உறுதியளித்திருந்தார். இந்த ஆண்டு ஐபிஎல் இந்தியாவில் நடப்பதால், இந்திய மண்ணில் ஐபிஎல் கோப்பையை 5வது முறையாக ஜெயித்துவிட்டு தோனி ஓய்வுபெறுவார் என எதிர்பார்க்கப்படுவதால், இதுவே அவரது கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம்.
இந்நிலையில், 41 வயதான தோனி, ஐபிஎல் 16வது சீசனுக்கான வலைப்பயிற்சியை மற்ற அனைத்து வீரர்களுக்கும் முன்பாக இப்போதே தொடங்கிவிட்டார். ஐபிஎல்லில் மட்டுமே ஆடிவரும் தோனிக்கு வேறு போட்டிகளில் ஆடும் பயிற்சி இல்லை என்பதால், முன்கூட்டியே வலைப்பயிற்சியை தொடங்கிவிட்டார் தோனி. அந்த வீடியோ வைரலாகிவருகிறது. அந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் செம உற்சாகமடைந்துள்ளனர்.