ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், தோல்விக்கான காரணம் குறித்து கேப்டன் தோனி பேசியுள்ளார். 

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ஆர்சிபி - சிஎஸ்கே இடையே புனேவில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவரில் 173 ரன்கள் அடித்தது.

174 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 160 ரன்கள் அடித்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இது புனே மைதானத்தில் கடினமான இலக்கு அல்ல. சவாலான இலக்குதான் என்றாலும் சிஎஸ்கே அணி அடித்திருக்கலாம். சிஎஸ்கே அணி வீரர்கள் சரியாக பேட்டிங் ஆடாததால் தான் தோல்வியை தழுவ நேரிட்டது. டெவான் கான்வேவும் மொயின் அலியும் மட்டுமே நன்றாக பேட்டிங் ஆடினர். கான்வே 37 பந்தில் 56 ரன்களும், மொயின் அலி 27 பந்தில் 34 ரன்களும் அடிக்க, ருதுராஜ் 28 ரன்கள் அடித்தார். உத்தப்பா(1), ராயுடு(10), ஜடேஜா (3), தோனி(2) ஆகிய முக்கியமான வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவரில் 160 ரன்கள் அடித்து தோற்றது. 

சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்து பேசிய கேப்டன் தோனி, 170+ ரன்களுக்கு சுருட்டினோம். பவுலர்கள் நன்றாக வீசியதால் தான் இந்த ஸ்கோருக்கு சுருட்ட முடிந்தது. ஆனால் பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடாததுதான் தோல்விக்கு காரணம். இலக்கை விரட்டும்போது நமது உள்ளுணர்வு அல்லது நமது நோக்கத்தின் படி ஷாட்டுகளை ஆடாமல், ஆட்டத்தின் சூழலை கருத்தில்கொண்டு ஆடவேண்டும். ஷாட் செலக்‌ஷன் நன்றாக இருக்கவேண்டும். சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததுதான் பிரச்னையாக அமைந்தது என்று தோனி கூறினார்.