Asianet News TamilAsianet News Tamil

#AUSvsIND பந்தை என்கிட்ட கொடுக்கும்போது ரஹானே சொன்னது இதுதான்..! மனம் திறக்கும் முகமது சிராஜ்.

ஆஸி.,க்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட்டில் அறிமுகமான முகமது சிராஜ், அறிமுக இன்னிங்ஸிலேயே 2 விக்கெட்டை வீழ்த்தி அசத்திய நிலையில், பந்தை தன்னிடம் கொடுக்கும்போது கேப்டன் ரஹானே தன்னிடம் சொன்னது என்னவென்று மனம் திறந்துள்ளார்.
 

mohammed siraj reveals what rahane said to him before hand over the ball in second test
Author
Melbourne VIC, First Published Dec 26, 2020, 8:14 PM IST

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸி., அணி 20 ஓவரில் 195 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்டமுடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் அடித்துள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணியில் 4 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. கோலி மற்றும் ஷமிக்கு பதிலாக முறையே ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டனர். தொடக்க வீரர் பிரித்வி ஷாவுக்கு பதிலாக ஷுப்மன் கில்லும், விக்கெட் கீப்பர் ரிதிமான் சஹாவுக்கு பதிலாக ரிஷப் பண்ட்டும் சேர்க்கப்பட்டனர். 

ஷுப்மன் கில் மற்றும் முகமது சிராஜ் ஆகிய இருவருக்கும் இதுதான் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி. அறிமுக போட்டியிலேயே அதுவும் ஆஸ்திரேலிய மண்ணில் அபாரமாக பந்துவீசினார் முகமது சிராஜ். முதல் இன்னிங்ஸில் பதினைந்து ஓவர்கள் பந்துவீசி 40 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் சிராஜ்.

சிராஜின் முதல் விக்கெட்டே, ஆஸி., அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மார்னஸ் லபுஷேன். களத்தில் நிலைத்து நின்று சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த லபுஷேனை 48 ரன்களுக்கு வீழ்த்தினார் சிராஜ். அடுத்ததாக க்றிஸ் க்ரீனை வீழ்த்தினார்.

சிராஜின் பவுலிங், நன்றாக ஸ்விங் ஆன நிலையில், அவரது பவுலிங் பாராட்டுகளை குவித்துவருகிறது. இந்நிலையில், தன்னிடம் பந்தை கொடுக்கும்போது கேப்டன் ரஹானே சொன்னது என்னவென்று மனம் திறந்துள்ளார் சிராஜ். 

இதுகுறித்து பேசியுள்ள முகமது சிராஜ், நான் இந்திய டெஸ்ட் அணிக்கு ஆடுவதற்காக கேப் வாங்கிய தருணம், என் வாழ்வில் பெரிதாக சாதித்துவிட்ட திருப்தி. ரஹானே மற்றும் பும்ராவிடம் பேசும்போது என் நம்பிக்கை அதிகரித்தது. என் கை பவுலிங் வீச வேண்டும் என்று அரித்துக்கொண்டே இருந்தது. உணவு இடைவேளைக்கு பின், 2வது செசனில் என்னிடம் ரஹானே பாய் பந்தை கொடுத்தபோது, உனக்கு 2 ஓவர் தான்; விக்கெட்டில் ஈரப்பதம் இருப்பதால் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும். அதனால் உனக்கு 2 ஓவர் தான் என்று சொல்லித்தான் என்னிடம் பந்தை கொடுத்தார் ரஹானே பாய்.

உணவு இடைவேளைக்கு பின் நான் பந்துவீச வந்தபோது, ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்தது. ரன் அடிக்கவிடாமல் பேட்ஸ்மேன்கள் மீதான அழுத்தத்தை அதிகரிப்பதே என் திட்டம். இன்ஸ்விங் இயல்பாகவே எனக்கு வரும். க்றிஸ் க்ரீனுக்கு வீசும்போது பந்து நன்றாக அவுட்ஸ்விங் ஆனது. எனவே தொடர்ச்சியாக 2 ஓவர்களை அவுட்ஸ்விங் வீசி, திடீரென ஒரு பந்தை இன்ஸ்விங்காக வீசினேன். அவர் அவுட்டாகிவிட்டார். அவரை அவுட்ஸ்விங்கிற்கு செட் செய்து விக்கெட் எடுத்தது மகிழ்ச்சியாக இருந்தது என்று சிராஜ் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios