இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸி., அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

போட்டி தொடங்குவதற்கு முன், ஆடும் இரு நாடுகளின் தேசிய கீதம் ஒலிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில், சிட்னியில் இந்திய தேசிய கீதம் ஒலிக்கும்போது, இந்திய ஃபாஸ்ட் பவுலர் முகமது சிராஜ் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். 

முகமது சிராஜ் ஆஸி., சுற்றுப்பயணத்துக்கான டெஸ்ட் அணியில் இடம்பிடித்து ஆஸி., சென்று அங்கிருந்த நிலையில் தான், அவரது தந்தை இந்தியாவில் காலமானார். தந்தையின் இறுதிச்சடங்கிற்கு செல்ல, பிசிசிஐ அனுமதியளித்தும் கூட, நாட்டுக்காக ஆடுவது தான் முக்கியம் என்றும், அதுவே தனது தந்தையின் விருப்பம் என்றும் சொல்லிவிட்டு தந்தையின் இறுதிச்சடங்கில் கூட கலந்துகொள்ளாமல் ஆஸி.,யிலேயே இருந்தார் சிராஜ்.

2வது டெஸ்ட் போட்டியில் ஆடி அசத்தினார். இந்நிலையில், 3வது டெஸ்ட் போட்டிக்கான அணியிலும் இடம்பெற்றுள்ள சிராஜ், சிட்னியில் இந்திய தேசிய கீதம் ஒலிக்கும்போது நெகிழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். அருகில் நின்ற பும்ரா அவரை தேற்றினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது. சிராஜின் நாட்டுப்பற்றை ரசிகர்கள் மெச்சிவருகின்றனர்.

 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் ஆஸி., அணியின் முதல் விக்கெட்டை வீழ்த்தியதும் சிராஜ் தான். வார்னரை வெறும் ஐந்து ரன்களுக்கு வீழ்த்தினார் சிராஜ்.