Asianet News TamilAsianet News Tamil

#INDvsENG அஷ்வின் சதத்தை தானே அடித்ததுபோல் கொண்டாடிய முகமது சிராஜ்..! வைரல் வீடியோ

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் அஷ்வின் அடித்த சதத்தை தானே அடித்ததுபோல் முகமது சிராஜ் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் தாறுமாறாக வைரலாகிவருகிறது.
 

mohammed siraj celebration of ashwin century video goes viral in twitter
Author
Chennai, First Published Feb 15, 2021, 6:43 PM IST

இந்தியா இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் அதிரடி சதம்(161), ரஹானே(67) மற்றும் ரிஷப் பண்ட்டின்(58) அரைசதம் ஆகியவற்றின் விளைவாக முதல் இன்னிங்ஸில் 329 ரன்களை குவித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, சேப்பாக்கம் ஆடுகளத்தின் தன்மை 2ம் நாள் மாறியதையடுத்து, இந்திய ஸ்பின்னர்களை சமாளித்து பேட்டிங் ஆடமுடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக அஷ்வின் சுழலை சமாளிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர். ஜோ ரூட், சிப்ளி, பர்ன்ஸ், ஸ்டோக்ஸ் ஆகிய அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததையடுத்து, முதல் இன்னிங்ஸில் வெறும் 134 ரன்களுக்கு சுருண்டது.

195 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் ஷுப்மன் கில்(14), ரோஹித் சர்மா(26), புஜாரா(7), ரிஷப் பண்ட்(8), ரஹானே(10) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 106 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஸ்பின்னிற்கு சாதகமான மற்றும் பேட்டிங்கிற்கு சவாலான சேப்பாக்கம் ஆடுகளத்தில், கோலியும் அஷ்வினும் இணைந்து சிறப்பாக ஆடி 7வது விக்கெட்டுக்கு 96 ரன்களை குவித்தனர். கோலியே 62 ரன்னில் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய அஷ்வின் சதமடித்து அசத்தினார். அஷ்வின் 106 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 2வது இன்னிங்ஸில் 286 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது. 482 ரன்கள் என்ற இலக்கை விரட்டும் இங்கிலாந்து அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் அடித்துள்ளது.

2வது இன்னிங்ஸில் அஷ்வின் சதமடிக்கும்போது, அவரது பேட்டிங் பார்ட்னராக களத்தில் இருந்தவர் பேட்டிங் ஆர்டரில் கடைசி வீரரான முகமது சிராஜ். அஷ்வின் சதமடிக்கும் வரை, தனது விக்கெட்டை இழந்துவிடாமல் பார்த்துக்கொண்ட சிராஜ், தன் பங்கிற்கு 16 ரன்களும் அடித்தார். அஷ்வின் சதமடித்தபோது, அதை அஷ்வின் கொண்டாடியதைவிட, மிகுந்த மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடித்தீர்த்தார் முகமது சிராஜ். அந்த வீடியோவை டுவிட்டரில் பகிர, அது செம வைரலாகிவருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios