ரோகித் சர்மாவின் பேட்டிங் எனக்கு ரொம்பவே பிடிக்கும், அவர் சிஎஸ்கே அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடினார் என்று முகமது ஷமி கூறியுள்ளார்.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 29ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது.
பின்னர் கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணியில் சுர்யகுமார் யாதவ் 0, ஹர்திக் பாண்டியா 2, டிம் டேவிட் 13, ரொமாரியோ ஷெப்பர்டு 1 என்று வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இஷான் கிஷான் 23 ரன்னிலும், திலக் வர்மா 31 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி வரை விளையாடிய ரோகித் சர்மா 63 பந்துகளில் 11 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியாக மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 186 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியின் மூலமாக மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 6 போட்டிகளில் 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா குறித்து முகமது ஷமி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ரோகித் சர்மா பேட்டிங் எனக்கு ரொம்பவே பிடிக்கும். சிஎஸ்கே அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடினார். அவருக்கு எந்த ஆதரவும் இல்லாத நிலையிலும் சிறப்பாக பேட்டிங் செய்து சதம் விளாசினார் என்று கூறியுள்ளார்.
