Asianet News TamilAsianet News Tamil

#ENGvsIND ஷமி அபார அரைசதம்.. பும்ரா செம பேட்டிங்..! ஈகோவிற்கு இடம் கொடுத்து வெற்றியை பறிகொடுத்த இங்கிலாந்து

ஷமியும் பும்ராவும் சேர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் அபாரமாக ஆடி, இங்கிலாந்துக்கு சாதகமாக இருந்த போட்டியை தலைகீழாக மாற்றி, இந்தியாவிற்கு வெற்றி வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளனர்.
 

mohammed shami and jasprit bumrah batting well grab the winning chance from england in second test
Author
London, First Published Aug 16, 2021, 6:10 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் அடிக்க, இங்கிலாந்து அணி 391 ரன்கள் அடித்தது.

27 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை 4ம் நாளான நேற்றைய ஆட்டத்தில் தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ராகுல்(5) மற்றும் ரோஹித்(21) ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, கோலியும் 20 ரன்களில் வெளியேற இந்திய அணி 55 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

அதன்பின்னர் சீனியர் வீரர்களான ரஹானேவும் புஜாராவும் இணைந்து அனுபவத்தை பயன்படுத்தி பார்ட்னர்ஷிப் அமைத்து அருமையாக ஆடினர். 4வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து அருமையாக ஆடி 100 ரன்களை சேர்த்து கொடுத்தனர். சரியான நேரத்தில் ஃபார்முக்கு வந்து இருவரும் பொறுப்புடன் பேட்டிங் ஆடி இந்திய அணியை மோசமான நிலையிலிருந்து காப்பாற்றினர். புஜாரா 45 ரன்னில் ஆட்டமிழக்க, ரஹானே 61 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஜடேஜா 3 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ரிஷப் பண்ட்டும் இஷாந்த் சர்மாவும் களத்தில் இருந்த நிலையில், 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் அடித்திருந்த நிலையில், 4ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட், இன்றைய ஆட்டத்தின் 4வது ஓவரிலேயே 22 ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத்தொடர்ந்து இஷாந்த் சர்மாவும் 16 ரன்னில் ஆட்டமிழந்தார்.

209 ரன்களுக்கு இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் யாருமே எதிர்பார்த்திராத வகையில் ஷமியும் பும்ராவும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி, இங்கிலாந்திடம் இருந்த வெற்றி வாய்ப்பை தட்டிப்பறித்து, இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் டெயிலெண்டரான ஆண்டர்சனுக்கு பும்ரா பவுன்ஸர்களாக வீசியதை மனதில் வைத்துக்கொண்டு, பதிலடி கொடுக்கும் முனைப்பில் பும்ராவுக்கும் ஷமிக்கும் மார்க் உட்டை வைத்து பவுன்ஸர்களாக வீசவைத்தது இங்கிலாந்து அணி. ஆனால் இதை எதிர்பார்த்த பும்ராவும் ஷமியும், பவுன்ஸர்களை சிறப்பாக எதிர்கொண்டு, அந்த நேரத்தில் களத்தில் செட்டிலும் ஆகினர். பும்ராவும் ஷமியும் களத்திற்கு வந்தபோதே, ஸ்டம்ப்பை நோக்கி வீசியிருந்தால் அவர்கள் அவுட்டாகியிருக்கக்கூடும். ஆனால் பும்ரா கொடுத்ததை திருப்பி கொடுக்க வேண்டும் என்று, ஈகோவிற்கு இடம் கொடுத்து பவுன்ஸர்களாக வீசினர் இங்கிலாந்து பவுலர்கள். ஆனால் அவற்றை அருமையாக எதிர்கொண்டு ஆடியதுடன், ஸ்கோரும் செய்து, இங்கிலாந்து பவுலர்களுடனான போட்டியில் ஜெயித்தனர் பும்ராவும் ஷமியும்.

களத்தில் செட்டில் ஆனபின்னர் அவர்களை வீழ்த்த இங்கிலாந்து பவுலர்கள் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. அருமையான கவர் டிரைவ்கள், இறங்கி லாங் ஆனில் சிக்ஸர் என அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார் ஷமி. இருவரும் இணைந்து உணவு இடைவேளை வரை 77 ரன்களை குவித்தனர். உணவு இடைவேளை வரை இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் அடித்துள்ளது. ஷமி 52 ரன்களுடனும், பும்ரா 30 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கடைசி வரை அவர்கள் இருவரையும் இங்கிலாந்து பவுலர்களால் வீழ்த்தவே முடியவில்லை.

இந்திய அணி 259 ரன்கள் முன்னிலையில் இருந்த நிலையில், 2வது செசனிலும் இந்தியா தொடர்ந்து பேட்டிங் ஆடுகிறது. பும்ராவும் ஷமியும் ஆடுகின்றனர். கடைசி 2 செசனில் இங்கிலாந்து அணி இந்திய நிர்ணயிக்கப்போகும் இலக்கை ் அடிப்பது சாத்தியமே இல்லை. இந்திய அணி ஆரம்பத்தில் 2-3 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்தியாவின் வெற்றிக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது.ஆனால் பும்ராவும் ஷமியும் அதை பறித்துவிட்டனர். இனிமேல் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறும் அல்லது டிரா ஆகும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios