ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களை தேர்வு செய்துள்ளனர் முன்னாள் வீரர்களான முகமது அசாருதீன் மற்றும் வாசிம் ஜாஃபர். 

கடந்த 2021ம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அரையிறுதிக்கு முன்னேறாமல் சூப்பர் 12 சுற்றுடனேயே வெளியேறியது. இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளுமே தயாராகிவரும் நிலையில், இந்திய அணியும் கோப்பையை தூக்கும் முனைப்பில் வீரர்கள் தேர்வில் கவனம் செலுத்திவருகிறது. ஆசிய கோப்பை தொடரும் நடக்கவுள்ளது.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வீரர்கள் ஐபிஎல்லில் அபாரமாக விளையாடி தங்களது திறமைகளை காட்டிவருகின்றனர். இந்திய அணியில் ஆல்ரவுண்டருக்கான இடங்களை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது.

ஹர்திக் பாண்டியா காயத்திலிருந்து மீண்டு வந்து அபாரமாக பேட்டிங் ஆடிக்கொண்டிருக்கிறார். அவர் பெரிதாக பந்துவீசுவதில்லை என்றாலும், தன்னை ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே எடுக்குமளவிற்கு பேட்டிங்கில் அசத்திவருகிறார். அவர்தவிர, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், வெங்கடேஷ் ஐயர், அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர் என ஆல்ரவுண்டர்கள் வரிசைகட்டி நிற்கின்றனர்.

இந்நிலையில், டி20 உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை தொடர்களுக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்களை ஆல்ரவுண்டர்களாக எடுக்கலாம் என்று முகமது அசாருதீன் மற்றும் வாசிம் ஜாஃபர் ஆகிய முன்னாள் வீரர்கள் தேர்வு செய்துள்ளனர்.

முகமது அசாருதீனின் தேர்வு - ஹர்திக் பாண்டியா, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா

வாசிம் ஜாஃபரின் தேர்வு - ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், அக்ஸர் படேல்(ஜடேஜாவிற்கு மாற்று)