உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. அதற்காக அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு, தீவிரமாக தயாராகிவருகின்றன. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என்று பல முன்னாள் ஜாம்பவான்கள் கணித்துள்ளனர். அதிலும் உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பதால் இங்கிலாந்து அணி வெல்வதற்கான வாய்ப்புதான் சற்று அதிகமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. 

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளும் சிறப்பாக உள்ளன. ஆனாலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தான் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள பிரதான அணிகளாக கருதப்படுகின்றன. 

சர்ஃபராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிட முடியாது. ஷோயப் மாலிக், ஹஃபீஸ் போன்ற அனுபவ வீரர்கள் மற்றும் ஃபகார் ஜமான், ஷாஹீன் அஃப்ரிடி போன்ற இளம் வீரர்கள் என அனுபவ மற்றும் இளம் வீரர்களை கொண்ட நல்ல கலவையிலான அணியாக திகழ்கிறது. 

இங்கிலாந்தில் 2009ல் நடந்த டி20 உலக கோப்பை, 2017ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி ஆகிய இரண்டு முக்கியமான தொடர்களை பாகிஸ்தான் வென்றுள்ளது. எனவே இங்கிலாந்து கண்டிஷனில் பாகிஸ்தான் நன்கு ஆடக்கூடிய அணி என்பதால் அந்த அணிக்கான வாய்ப்பும் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. 

இங்கிலாந்துக்கு எதிராக நடந்துவரும் தொடரில் கூட பாகிஸ்தான் அணி நன்றாகவே ஆடிவருகிறது. பேட்டிங்கில் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் பவுலிங் பெரியளவில் இல்லை. பாகிஸ்தான் அணியில் வழக்கமாக ஃபாஸ்ட் பவுலர்கள் தான் தெறிக்கவிடுவார்கள். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பாகிஸ்தானின் ஃபாஸ்ட் பவுலிங்கை எதிரணி பேட்ஸ்மேன்கள் தெறிக்கவிடுகின்றனர்.

பாகிஸ்தான் அணியின் பவுலிங் சிறப்பாக இல்லை. இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 373 ரன்களை வாரி வழங்கியது பாகிஸ்தான். அந்த கடின இலக்கை பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அபாரமாக விரட்டினர். எனினும் அந்த அணியால் 361 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. மூன்றாவது போட்டியிலும் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. 358 ரன்களை குவித்தது. ஆனால் 359 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் 45வது ஓவரிலேயே அசால்ட்டாக எட்டிவிட்டனர்.

இங்கிலாந்து ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால் எவ்வளவு கடின இலக்கையும் எட்டக்கூடும். ஆனாலும் பாகிஸ்தான் பவுலிங்கில் ஒரு ஆக்ரோஷம் இல்லை. ஷாஹீன் அஃப்ரிடி, ஃபஹீம் அஷ்ரஃப், ஹசன் அலி ஆகியோரின் பவுலிங் அடித்து நொறுக்கப்படுகிறது. ஜூனைத் கான் மட்டும் ஓரளவிற்கு பரவாயில்லை. உலக கோப்பை அணியில் இடம்பெற்றிருக்கும் வீரர்கள்தான் இங்கிலாந்துக்கு எதிராக ஆடிவருகின்றனர். அப்படியிருந்துமே பவுலிங்கில் மோசமாக சொதப்புவது பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவாகவும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

எனவே ஃபாஸ்ட் பவுலிங்கில் மாற்றம் செய்வது உறுதியாகியுள்ளது. உலக கோப்பை அணியில் புறக்கணிக்கப்பட்ட இடது கை ஃபாஸ்ட் பவுலர் முகமது அமீர் அணியில் எடுக்கப்பட உள்ளார். உலக கோப்பைக்கு முன் அவர் முழு உடற்தகுதி பெற்றுவிட்டால் அவர் அணியில் எடுக்கப்படுவதை அந்த அணியின் தேர்வுக்குழு தலைவர் இன்சமாம் உல் ஹக் உறுதிப்படுத்தியுள்ளார்.