ரோஹித் சர்மா - விராட் கோலி ஆகிய இருவரும் சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களாக திகழ்கின்றனர். விராட் கோலி மூன்றுவிதமான போட்டிகளிலும் அபாரமாக ஆடி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். விராட் கோலியின் கெரியர் முடிவதற்குள் பெரும்பாலான பேட்டிங் சாதனைகளை தகர்த்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தளவிற்கு விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை சீராக ஆடி ரன்களை குவித்துவருகிறார். 

ரோஹித் சர்மா இப்போதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் சோபிக்க தொடங்கியுள்ளார். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா அபாரமான வீரர்.  அசாத்தியமான சாதனைகளை தன்னகத்தே கொண்டவர். ஒருநாள் கிரிக்கெட்டில் 264 என்ற அசாத்திய அதிகபட்ச ஸ்கோருடன் 3 இரட்டை சதங்களை விளாசியுள்ள ரோஹித் சர்மா, சர்வதேச டி20 போட்டிகளில் 4 சதங்களை விளாசியுள்ளார். ரோஹித் சர்மா களத்தில் நிலைத்துவிட்டால், அதன்பின்னர் நடப்பதே வேறு என்பதும், அன்றைய தினம் ரோஹித் சர்மாவுக்கானது என்பதும், பெரிய இன்னிங்ஸை ஆடி பெரிய ஸ்கோரை அடிப்பார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

சர்வதேச அளவில் விராட் கோலிதான் சிறந்த பேட்ஸ்மேனாக அறியப்பட்டாலும், அவருக்கு சற்றும் சளைத்தவர் அல்ல ரோஹித் சர்மா. விராட் கோலி ஆடுவது மாதிரியான இன்னிங்ஸை ரோஹித் ஆடியிருக்கிறார். ஆனால் ரோஹித் மாதிரியான அசாத்திய இன்னிங்ஸை கண்டிப்பாக கோலியால் ஆடமுடியாது. ஒருவரை ஒருவர் மட்டம்தட்ட முடியாது. இருவருமே தலைசிறந்த பேட்ஸ்மேன்கள்.

அப்படியிருக்கையில், இருவரில் யார் சிறந்த வெள்ளைப்பந்து கிரிக்கெட் வீரர்? யார் ஆடுவது அழகாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கும் என்ற தர்மசங்கடமான கேள்விக்கு முகமது கைஃப் வெளிப்படையாக பதிலளித்துள்ளார். 

அதற்கு பதிலளித்த கைஃப், ஒரேநாளில் இரண்டு வெவ்வேறு போட்டிகளில் ரோஹித்தும் கோலியும் ஆடினால் நான் ரோஹித் ஆடுவதைத்தான் பார்க்கப்போவேன். விராட் கோலி தலைசிறந்த வீரர் என்பதில் சந்தேகமோ மாற்றுக்கருத்தோ இல்லை. ஆனால் ரோஹித் சர்மாவின் பேட்டிங்கில் தான் நளினமும் அழகும் இருக்கும். ரோஹித் சர்மா, ஒரு பவுலரை அடித்து நொறுக்குவார். ஆனால், நமது பவுலிங்கை ரோஹித் பொளந்துகட்டுகிறார் என்ற உணர்வு அந்த பவுலருக்கே வராத அளவிற்கு ரோஹித்தின் பேட்டிங் இருக்கும் என்று கைஃப் தெரிவித்தார்.