பாகிஸ்தான் அணி எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களை பெற்றிருந்த அணி. அந்த அணி உருவாக்கிய பல சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் முகமது இர்ஃபானும் ஒருவர். 2010ம் ஆண்டு பாகிஸ்தான் அணியில் அறிமுகமான இர்ஃபான், 2016ம் ஆண்டு வரை அந்த அணியில் ஆடினார். 

ஃபாஸ்ட் பவுலர்கள் உயரமாக இருப்பது அவர்களுக்கு கூடுதல் பலம். அந்தவகையில், இர்ஃபான் அளவுக்கதிகமாக உயரமாக இருந்தவர். அவரது உயரம் 7 அடி ஒரு இன்ச். அதுவே அவருக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. எதிரணி பேட்ஸ்மேன்கள் அவரது பவுலிங்கை கணிக்கமுடியாமல் திணறினர். நல்ல உயரமாக இருந்ததால், வேகமாக மட்டுமல்லாமல் நல்ல பவுன்ஸர்களையும் வீசினார். 

இந்நிலையில், கடந்த ஆண்டு ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த முகமது இர்ஃபான், கவுதம் கம்பீரின் கெரியரை முடித்துவைத்தது நான் தான் என தெரிவித்திருந்தார்.

2012ம் ஆண்டு பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வந்திருந்தபோது, டி20 தொடரை சமன் செய்த பாகிஸ்தான் அணி, ஒருநாள் தொடரை 2-1 என வென்றது. அந்த தொடரில் முகமது இர்ஃபான் முக்கிய பங்காற்றினார். அந்த தொடரில் மட்டுமே கம்பீரை 4 முறை இர்ஃபான் வீழ்த்தியிருந்தார்.

முகமது இர்ஃபான் சொன்ன அந்த தொடர் தான் கம்பீர் இந்திய அணிக்காக ஆடிய கடைசி டி20 தொடர். அதேபோல அந்த தொடர் முடிந்த சிறிது காலத்திலேயே ஒருநாள் அணியிலிருந்தும் கம்பீர் ஓரங்கட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், தற்போதைய பேட்டி ஒன்றில், கம்பீரின் கெரியரை முடித்துவைத்ததாக கூறியது குறித்தும் அதற்கான காரணம் குறித்தும் பேசியுள்ளார் இர்ஃபான். இதுகுறித்து பேசிய முகமது இர்ஃபான், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டிகளில் யார் சிறப்பாக ஆடி அசத்துகிறார்களோ அவர்கள் ஹீரோ.. சொதப்புபவர்கள் ஜீரோ. கவுதம் கம்பீரால் நான் வீசிய பந்துகளை சரியாக பார்க்கவே முடியவில்லை. எனது பவுன்ஸர்களை கம்பீர் எதிர்கொண்ட விதத்தை பார்த்து, இது கம்பீர் மாதிரியே இல்லை என்று கூறினர்.

அந்த தொடருக்கு பிறகு கம்பீர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின்னர் ஒரு சில போட்டிகளில் ஆடினாலும், 2012 தொடர் தான் அவரது கெரியர் முடிவடைய காரணம் என்பதால் தான் நான் அந்த கருத்தை சொன்னேன் என்று முகமது இர்ஃபான் தெரிவித்தார். 

கம்பீர் இந்திய அணியின் மேட்ச் வின்னர்களில் ஒருவர். தோனி தலைமையில் இந்திய அணி வென்ற 2007 டி20 உலக கோப்பை மற்றும் 2011 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை ஆகிய உலக கோப்பை தொடர்களின் இறுதி போட்டிகளிலும் அபாரமாக ஆடி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் கம்பீர். ஐசிசி தொடர்களின் நாக் அவுட் போட்டிகளிலும் நெருக்கடியான போட்டிகளிலும், அழுத்தத்தை கையாண்டு அபாரமாக ஆடியவர் கம்பீர். 

இந்திய அணிக்காக 58 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 4154 ரன்களையும், 147 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5238 ரன்களையும் 37 டி20 போட்டிகளில் ஆடி 932 ரன்களையும் குவித்துள்ளார் கம்பீர்.