இதுகுறித்து பேசியுள்ள முகமது ஹஃபீஸ், சூதாட்டத்தில் ஈடுபட்ட அந்த வீரர்கள் எனது சகோதரர்கள் போன்றவர்கள். அவர்கள் செய்தது தவறு. அதனால் அவர்கள் செய்த அந்த விஷயத்திற்கு நான் உடன்படவே மாட்டேன். அதை முற்றிலுமாக எதிர்க்கிறேன். சில வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதை அறிந்ததும், அதற்கு எதிராக குரல் எழுப்ப முயன்றேன். 

ஆனால், அவர்கள்(சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள்) கண்டிப்பாக பாகிஸ்தான் அணிக்கு ஆடுவார்கள். நீயும் ஆட வேண்டும் என்று விரும்பினால், வாயை மூடிக்கொண்டு ஆடு என்று எனக்கு அறிவுறுத்தப்பட்டது. எனது திறமையையும் நேர்மறை சக்தியையும் பாகிஸ்தானுக்காக செலவிடாமல் இருக்க நான் விரும்பவில்லை. எனவே எனக்கு பிடிக்கவில்லையென்றாலும் கூட அவர்களுடன் இணைந்து ஆடினேன். 

அதுபோன்ற வீரர்களை மீண்டும் பாகிஸ்தான் அணியில் அழைத்து ஆடுவது தவறு. பாகிஸ்தான் அணிக்கு அது பலனளிக்காது என்று முகமது ஹஃபீஸ் தனது மனக்குமுறல்களை கொட்டித்தீர்த்துள்ளார். 

பாகிஸ்தான் அணியில் 2010ம் ஆண்டு சூதாட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அந்த ஆண்டில் இங்கிலாந்துக்கு சென்று பாகிஸ்தான் அணி ஆடியபோதுதான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து சல்மான் பட், முகமது ஆசிஃப் மற்றும் முகமது அமீர் ஆகியோருக்கு 2011ம் ஆண்டின் தொடக்கத்தில், 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அமீர் மீண்டும் பாகிஸ்தான் அணிக்காக ஆடிவருகிறார்.