மேஜர் லீக் கிரிக்கெட்டில் நூர் அகமதுவின் மேஜிக் பவுலிங்கால் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியை டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியது.

MLC 2025 Noor Ahmed Magic Bowling Helped Texas Super Kings Wins: அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் 2025 மிகவும் பரபரப்பாக சென்று வருகிறது. நேற்றைய போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. ஓக்லாந்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 181 ரன்கள் குவித்தது.

டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி

டேவான் கான்வே 22 பந்தில் 34 ரன்களும், டேரில் மிட்ச்செல் 36 ரன்களும், கடைசிக் கட்டத்தில் டோனோவன் ஃபெரீரா 16 பந்தில் 32 ரன்களும் எடுத்தனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் சார்பில் தன்வீர் சங்கா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்பு சவாலான இலக்கை நோக்கி பேட்டிங் செய்த லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி 17.1 ஓவர்களில் வெறும் 124 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 57 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

பவுலிங்கில் அசத்திய நூர் அகமது

லாஸ் ஏஞ்சல்ஸ் அணியில் அலெக்ஸ் ஹால்ஸ் 25 ரன்களும், வான் ஷால்க்விக் 27 ரன்களும் எடுத்தனர். டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி வீரர் நூர் அகமது 4 ஓவர்களில் வெறும் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். ஆடம் மில்னே 2 விக்கெட்டுகளும், ஸ்டீபன் விஸ்வாஸ் வைக் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.

மேஜர் லீக்கில் மாஸ் காட்டும் நூர் அகமது

அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் 2025 தொடரில் சிஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடிய நூர் அகமது 24 விக்கெட்டுகளை சாய்த்தார். இப்போது அந்த பார்மை மேஜர் லீக் கிரிக்கெட் தொடரிலும் தொடர்ந்து வருகிறார். எம்ஐ நியூயார்க்கிற்கு எதிராக ஒரு விக்கெட் எடுத்த பிறகு, லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸுக்கு எதிராக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

ஆப்கானிஸ்தானில் 2 தரமான ஸ்பின்னர்கள்

நூர் அகமது மேஜர் லீக் கிரிக்கெட்டில் நிதிஷ் குமார், மேத்யூ டிராம்ப், ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் சுனில் நரைன் ஆகிய முக்கியமான வீரர்களின் விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணியில் இரண்டு ஸ்பின்னர்கள் உலகம் முழுவதும் சென்று லீக்குகளில் கலக்கி வருகின்றனர். அதில் முதலாவது இருப்பவர் ரஷித் கான். இவர் எந்த அளவுக்கு உலகத்தரம் வாய்ந்த வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது நூர் அகமதுவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.