பிசிசிஐ தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிசிசிஐ துணைத் தலைவராக ராஜீவ் சுக்லா நீடிக்கிறார். யார் இந்த மிதுன் மன்ஹாஸ் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
பிசிசிஐயின் 37வது தலைவராக முன்னாள் இந்திய வீரர் மிதுன் மன்ஹாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நடைபெற்ற 94வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் மிதுன் மன்ஹாஸ் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
ரோஜர் பின்னிக்கு அடுத்தபடியாக மன்ஹாஸ் பிசிசிஐயின் தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ளார். பிசிசிஐ தலைவர் பதவிக்கு மன்ஹாஸ் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்ததால், இந்தத் தேர்தல் போட்டியின்றி நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி அவர் தேர்வாகியுள்ளார்.
பிசிசிஐ புதிய தலைவர் மிதுன் மன்ஹாஸ்
இதே போல் மகளிர் ஐபிஎல் தலைவராக கேரள கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜெயேஷ் ஜார்ஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டில் நடைபெற்ற பிசிசிஐ நிர்வாகிகளின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில்தான், 45 வயதான மன்ஹாஸை பிசிசிஐ தலைவர் பதவிக்குக் கொண்டுவர திடீர் முடிவு எடுக்கப்பட்டது. ஐபிஎல்-லில் பல்வேறு அணிகளுக்காக விளையாடியுள்ள மன்ஹாஸ், குஜராத் அணியின் துணைப் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
பிசிசிஐ துணைத் தலைவர் யார்?
உ.பி.யைச் சேர்ந்த காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி. ராஜீவ் சுக்லா துணைத் தலைவராக நீடிக்கிறார். தேவ்ஜித் சைகியா செயலாளராகவும், பிரப்ஜி பாட்டியா இணைச் செயலாளராகவும் தொடர்கின்றனர். கர்நாடகாவைச் சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் ரகுராம் பட் புதிய பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அருண் துமால் ஐபிஎல் தலைவர் பதவியில் நீடிக்கிறார்.
யார் இந்த மன்ஹாஸ்?
ஜம்மு-காஷ்மீரில் பிறந்த மன்ஹாஸ், 18 ஆண்டுகள் முதல் தர கிரிக்கெட்டில் 157 போட்டிகளில் 9,714 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 27 சதங்கள், 49 அரைசதங்கள் அடங்கும். 2007-08ல் டெல்லிக்கு ரஞ்சி கோப்பையை வென்று தந்தார். ஐபிஎல்லில் டெல்லி, புனே, சென்னை அணிகளுக்காக மன்ஹாஸ் விளையாடியுள்ளார்.
ஓய்வுக்குப் பிறகு, ஆர்சிபி, பஞ்சாப், குஜராத் அணிகளுக்குப் பயிற்சியாளராகவும், வங்கதேச U-19 அணிக்கு ஆலோசகராகவும் இருந்துள்ளார். ரோஜர் பின்னிக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீரில் இருந்து பிசிசிஐ தலைவரான முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
