2015 உலக கோப்பையில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்ற ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர் மிட்செல் ஸ்டார்க், இந்த உலக கோப்பையிலும் அபாரமாக பந்துவீசிவருகிறார். 

இந்த உலக கோப்பையில் இதுவரை 7 போட்டிகளில் ஆடிய மிட்செல் ஸ்டார்க், 19 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலராக திகழ்கிறார். நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றது. 

ஆஸ்திரேலிய அணியின் வெற்றிகளுக்கு ஸ்டார்க் முக்கிய பங்காற்றியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்துவதற்கு ஸ்டார்க்கின் பவுலிங் மிக முக்கிய காரணம். முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி ஃபின்ச்சின் சதம், வார்னரின் அரைசதம் மற்றும் ஸ்மித், கேரியின் அதிரடியான பேட்டிங்கின் காரணமாக 285 ரன்கள் அடித்தது. 

286 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் வின்ஸை இரண்டாவது பந்திலேயே வீழ்த்தினார் பெஹ்ரெண்டோர்ஃப். அதன்பின்னர் 2 முக்கியமான வீரர்களான ஜோ ரூட் மற்றும் இயன் மோர்கன் ஆகிய இருவரையும் ஸ்டார்க் வீழ்த்தினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய, மறுமுனையில் அபாரமாக ஆடிக்கொண்டிருந்தார் பென் ஸ்டோக்ஸ். அந்த நிலையில், ஸ்டார்க்கிற்கு அடுத்த ஸ்பெல்லை கொடுத்தார் ஃபின்ச். 37வது ஓவரை வீசிய ஸ்டார்க், அந்த ஓவரின் கடைசி பந்தில் ஸ்டோக்ஸை வீழ்த்தினார்.

ஸ்டார்க் வீசிய துல்லியமான யார்க்கரில் கிளீன் போல்டானார் ஸ்டோக்ஸ். மிக துல்லியமாக வீசப்பட்ட அந்த ஸ்விங் யார்க்கரை ஸ்டோக்ஸ் இல்லாமல் வேறு எந்த பேட்ஸ்மேனாக இருந்தாலுமே ஆடுவது ரொம்ப கஷ்டம். அபாரமாக ஆடிய ஸ்டோக்ஸ், ஒரு சிறந்த பந்தில் தான் ஆட்டமிழந்தார். எனினும் ஸ்டம்பை பறிகொடுத்த ஸ்டோக்ஸ், பேட்டை கீழே போட்டு உதைத்து தனது அதிருப்தியையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்திவிட்டு சென்றார்.

ஸ்டோக்ஸின் விக்கெட்டுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. ஸ்டார்க் வீசிய அந்த துல்லியமான யார்க்கர் இந்த உலக கோப்பையின் மிகச்சிறந்த யார்க்கர் என்றே கூறலாம். அந்த வீடியோ இதோ..