மன்கட் ரன் அவுட் என்பது கிரிக்கெட்டின் புழக்கமான வார்த்தைதான் என்றாலும், அது ரசிகர்களிடையே மிகுந்த பிரபலமானது, அஷ்வினால் தான். கடந்த ஐபிஎல்(2019) சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லரை அஷ்வின் மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். 

ரன்னர் முறையில் இருக்கும் பேட்ஸ்மேன், பவுலர் பந்துவீசுவதற்கு முன்பாகவே க்ரீஸை விட்டு நகர்ந்தால், பவுலர் செய்யும் ரன் அவுட்டிற்கு பெயர் தான் மன்கட். ஐசிசி விதிப்படி மன்கட் ரன் அவுட் விதிமுறைக்குட்பட்டதே என்றாலும், பலரும் அது ஸ்போர்ட்ஸ் ஸ்பிரிட் கிடையாது என்று கூறுகின்றனர்.

அஷ்வின் மன்கட் ரன் அவுட் செய்தபோதே, அதற்கு முன்னாள், இந்நாள் வீரர்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் இருந்தது. அஷ்வின் கடந்த சீசனில் மன்கட் செய்த பின்னர் தான், அந்த வார்த்தை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. 

ஆனால், பந்துவீசும் முன் க்ரீஸை விட்டு நகரும் வீரரை முதல் முறை எச்சரிப்பதே பெரும்பாலான பவுலர்களின் வழக்கம். அந்தவகையில், இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து வீரர் அடில் ரஷீத்தை மிட்செல் ஸ்டார்க் எச்சரித்தார்.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நேற்று மான்செஸ்டரில் நடந்தது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, பேர்ஸ்டோவின் அபார சதம், சாம் பில்லிங்ஸ் மற்றும் கிறிஸ் வோக்ஸின் அரைசதத்தால் 50 ஓவரில் 302 ரன்களை குவித்தது. 303 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 73 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டாலும், மேக்ஸ்வெல் மற்றும் அலெக்ஸ் கேரியின் அபார சதத்தால் இலக்கை எட்டி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என தொடரை வென்றது. 

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து பேட்டிங்கின்போது 49வது ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீசினார். அந்த ஓவரின் ஒரு பந்தை ஸ்டார்க் வீசும் முன்பாகவே அடில் ரஷீத் க்ரீஸை விட்டு நகர்ந்து சென்றார். அதைக்கண்ட மிட்செல் ஸ்டார்க் பந்தை வீசாமல் ரஷீத்தை க்ரீஸுக்குள் நிற்குமாறு எச்சரித்துவிட்டு சென்றார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது. மிட்செல் ஸ்டார்க்கின் செம கெத்தான, தரமான சம்பவத்தின் வீடியோ இதோ..