வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன்மூலம் 20 ஆண்டு கால சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்துள்ளார் மிட்செல் ஸ்டார்க். 

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நாட்டிங்காமில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. எனினும் ஸ்மித் - அலெக்ஸ் கேரியின் பொறுப்பான பேட்டிங் மற்றும் கடைசி நேர குல்டர்நைலின் அதிரடி ஆகியவற்றின் விளைவாக 288 ரன்களை குவித்தது. 

289 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஹோப், பூரான், கேப்டன் ஹோல்டர் ஆகியோர் சிறப்பாக ஆடியபோதும், ஒரு நிலையான பார்ட்னர்ஷிப் அமையாததால் கடைசியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

ஆஸ்திரேலிய அணியின் சார்பில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க், அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். தொடக்கத்தில் கெய்லின் விக்கெட்டை வீழ்த்திய ஸ்டார்க், வெற்றியை நெருங்கிக்கொண்டிருந்த ஹோல்டர்-பிராத்வெயிட் ஜோடியை பிரித்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் இருவரையும் ஒரே ஓவரில் காலி செய்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றியை உறுதியும் செய்தார். 

இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டார்க், சர்வதேச ஒருநாள் போட்டியில் விரைவில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார். 77 போட்டிகளில் ஆடி 150 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார் ஸ்டார்க். இதற்கு முன்னதாக 78 போட்டிகளில் பாகிஸ்தான் ஸ்பின்னர் சாக்லைன் முஷ்டாக் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அதை முறியடித்து ஸ்டார்க் முதலிடம் பிடித்துள்ளார். 

இந்த பட்டியலில் மூன்றாமிடத்தில் இருந்த பிரெட் லீயை பின்னுக்குத்தள்ளி அண்மையில் ட்ரெண்ட் போல்ட் மூன்றாமிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.