ஆஸ்திரேலியாவில் முதல்தர கிரிக்கெட் தொடரான ஷெஃபில்ட் ஷீல்டு தொடர் நடந்துவருகிறது. இதில் மிட்செல் மார்ஷ் தலைமையிலான வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிக்கும் மேத்யூ வேட் தலைமையிலான டாஸ்மானியா அணிக்கும் இடையேயான போட்டி டிராவில் முடிந்தது.

கடந்த 10ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 337 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய டாஸ்மானியா அணி வீரர் டிம் பெய்ன் அபாரமாக ஆடி சதமடித்து, 121 ரன்களை குவிக்க, அந்த அணி முதல் இன்னிங்ஸில் 397 ரன்களை குவித்தது. 

இதையடுத்து 60 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 383 ரன்களை அடிக்க, நான்கு நாட்கள் முடிந்ததால் ஆட்டம் டிராவானது. இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 53 ரன்கள் அடித்த வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ், நான்காம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஆட்டமிழந்தார். இதனால் ஏற்பட்ட விரக்தியில், ஓய்வறை வரை செம கடுப்பில் சென்ற மிட்செல் மார்ஷ், ஓய்வறைக்கு சென்றதும் சுவரில் ஓங்கி குத்தியுள்ளார். அதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.