பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி மான்செஸ்டரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் அடித்தது. ஷான் மசூத்தின் சதம்(156) பாகிஸ்தான் அணி நல்ல ஸ்கோரை எட்ட உதவியது. இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது. 

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி பேட்டிங் ஆடியபோது, முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமது, களத்தில் ஆடும் வீரர்களுக்கு டிரிங்ஸ் எடுத்துவந்தார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனை தண்ணீர் தூக்கவைத்தது, அந்நாட்டு ரசிகர்களையும் கிரிக்கெட் வீரர்கள் சிலரையுமே கூட அதிருப்தியடைய செய்தது. அணி நிர்வாகத்தின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். 

 

இந்நிலையில், அதுகுறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் விளக்கமளித்துள்ளார். அதுகுறித்து பேசிய மிஸ்பா உல் ஹக், இது மிகவும் சாதாரண விஷயம் தான். வீரர்களுக்கு தண்ணீர் எடுத்துச்சென்றதை சர்ஃபராஸே தவறாக நினைக்கமாட்டார். நான் கேப்டனாக இருந்தபோது, நான் ஆடாத ஒரு போட்டியில் நானே வீரர்களுக்கு டிரிங்ஸ் எடுத்து சென்றிருக்கிறேன். எனவே இதில் தவறு எதுவும் இல்லையென்று மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் அணியின் சீனியர் வீரரும் முன்னாள் கேப்டனுமான சர்ஃபராஸ் அகமது, 3 விதமான அணிகளின் கேப்டன்சி பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்பட்டார். 2019 உலக கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேறியது, இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் டி20 தொடரை இழந்தது என தொடர் தோல்விகளை பாகிஸ்தான் அணி அடைந்ததையடுத்து, கேப்டன் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். பாகிஸ்தான் அணியில் சர்ஃபராஸ் அகமது இடம்பெற்றிருந்தாலும், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அவருக்கு ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை.