இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி வென்ற நிலையில், டி20 தொடரில் பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து இலங்கை அணி வென்றது. 
 
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் வென்று தொடரை வென்றுவிட்ட இலங்கை அணி, மூன்றாவது போட்டியிலும் பாகிஸ்தான் அணியை இலங்கை வீழ்த்தியது.

லாகூரில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சரியாக ஆடவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஒஷாடா ஃபெர்னாண்டோ அதிரடியாக ஆடி 48 பந்துகளில் 78 ரன்களை குவித்தார். அவரது அதிரடியான பேட்டிங்கால் இலங்கை அணி 20 ஓவரில் 147 ரன்கள் அடித்தது. 

148 ரன்கள் என்ற கடினமில்லாத இலக்கையே பாகிஸ்தான் அணியால் அடிக்கமுடியவில்லை. தொடக்க வீரர் ஃபகார் ஜமான் முதல் பந்திலேயே கோல்டன் டக்கானார். பாபர் அசாம் இந்த போட்டியிலும் சரியாக ஆடவில்லை. 27 ரன்களில் பாபர் அசாம் அவுட்டாக, பொறுப்பாக ஆடி அரைசதம் அடித்த ஹாரிஸ் சொஹைலும் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கேப்டன் சர்ஃபராஸ் அகமது, இமாத் வாசிம், ஆசிஃப் அலி ஆகியோரும் ஏமாற்றமளிக்க, பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 134 ரன்கள் மட்டுமே அடித்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 

இதையடுத்து டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக இருக்கும் பாகிஸ்தான் அணி, சொந்த மண்ணில் இலங்கையிடம் ஒயிட்வாஷ் ஆகியிருப்பது அந்த அணிக்கு மரண அடி. நீண்ட இடைவெளிக்கு பிறகு சொந்த மண்ணில் சர்வதேச கிரிக்கெட் ஆடிய பாகிஸ்தான் அணி, டி20 தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. 

இந்த படுதோல்வி பாகிஸ்தான் அணியின் புதிய தலைமை  பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக்கை கடுமையாக பாதித்துள்ளது. இந்த தோல்வி குறித்து பேசிய மிஸ்பா, இந்த தொடர் பாகிஸ்தான் அணியை விழிப்படைய செய்துள்ளது. கிட்டத்தட்ட இந்த தொடரில் ஆடிய அதே வீரர்கள் தான் கடந்த 3-4 ஆண்டுகளாக சிறப்பாக ஆடி பாகிஸ்தான் அணியை டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 இடத்திற்கு கொண்டுவந்தனர். இந்த தொடர், அணியின் கண்ணை திறந்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் சிஸ்டத்தின் கண்களையும் சேர்த்தே திறந்துள்ளது. 

அணியின் முக்கியமான வீரர்கள் இல்லாத ஒரு அணியிடம்(இலங்கை அணி) படுமோசமாக தோற்றால், நாம் எப்படி நம்பர் 1 அணியாக இருக்கமுடியும்? இந்த தொடரில் பாகிஸ்தான் அணி பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே படுமோசமாக ஆடியது. இது ஒருதலைபட்சமான தொடராக அமைந்துவிட்டது என்று மிஸ்பா காட்டமாக தெரிவித்தார்.