உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இதுவரை ஆடிய 6 போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் ஏழாமிடத்தில் உள்ளது. 

உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இங்கிலாந்துடன் ஒருநாள் தொடரில் ஆடியது பாகிஸ்தான் அணி. அந்த தொடரில் தொடர்ச்சியாக 300 ரன்களுக்கு மேல் பெரிய ஸ்கோர் அடித்தும் பாகிஸ்தான் அணி ஒயிட் வாஷ் ஆனது. அதன் எதிரொலியாக உலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த ஃபாஸ்ட் பவுலர்கள் ஜுனைத் கான் மற்றும் ஃபஹீம் அஷ்ரஃப் ஆகிய இருவரும் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டு வஹாப் ரியாஸ் மற்றும் முகமது அமீர் சேர்க்கப்பட்டனர். 

முகமது அமீர், வஹாப் ரியாஸ், ஹசன் அலி, ஷாஹின் அஃப்ரிடி ஆகியோருடன் முகமது ஹஸ்னைன் என்ற ஃபாஸ்ட் பவுலரும் உலக கோப்பை அணியில் உள்ளார். ஹஸ்னைன் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் இடம்பெற்றிருந்தார். ஆனால் அந்த தொடரில் ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. 

ஆனாலும் உலக கோப்பை அணியிலும் ஹஸ்னன் எடுக்கப்பட்டார். உலக கோப்பையிலும் ஒரு போட்டியில் கூட அவர் ஆடவைக்கப்படவில்லை. இதுகுறித்து மிஸ்பா உல் ஹக் கேள்வி எழுப்பியுள்ளார். ஹஸ்னைனை ஆடும் லெவனில் எடுத்து ஆடவைக்கும் அளவிற்கு அவர் மீது நம்பிக்கையில்லை என்றால் அவரை ஏன் 15 பேர் கொண்ட அணியில் எடுக்க வேண்டும்..? இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் அவர் ஆடவைக்கப்படவில்லை. அப்படியிருக்கையில், அவரை ஏன் உலக கோப்பை அணியில் எடுத்து சும்மாவே உட்கார வைத்திருக்க வேண்டும் என்று மிஸ்பா உல் ஹக் கேள்வி எழுப்பியுள்ளார். 

இன்சமாம் உல் ஹக் தலைமையிலான தேர்வுக்குழு தான் பாகிஸ்தான் அணியை தேர்வு செய்தது.