பாகிஸ்தான் அணியின் புதிய தலைமை பயிற்சியாளருக்கான நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. யார் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட இருக்கிறார் என்பது குறித்து பார்ப்போம்.

பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக மிக்கி ஆர்துர் இருந்தார். இவரது பயிற்சி காலத்தில் பாகிஸ்தான் அணி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டது. 2017 சாம்பியன்ஸ் டிராபி வெற்றி, டி20 தரவரிசையில் முதலிடம் என அசத்தியது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் படுமோசமாக சொதப்பியது. அதுமட்டுமல்லாமல் உலக கோப்பையிலும் தோற்று வெளியேறியது. 

உலக கோப்பையுடன் மிக்கி ஆர்துர் மற்றும் பயிற்சியாளர் குழுவில் இருந்த மற்றவர்களின் பதவிக்காலமும் முடிந்தது. மிக்கி ஆர்துரை மீண்டும் தலைமை பயிற்சியாளராக நீட்டிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை. 

இதையடுத்து புதிய தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மோசின் ஹசன் கான் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் ஆகிய மூவருக்கும் இடையே போட்டி நிலவியது. 

இவர்களில் மோசின் ஹசன் கான் மற்றும் டீன் ஜோன்ஸ் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்று தெரிகிறது. ஏனெனில் மோசின் ஹசன் கானுக்கு தடையாக இருப்பது வயது. அவரது வயது 68. அதனால் அவர் நியமிக்கப்பட வாய்ப்பில்லை என்றும் அதேபோல டீன் ஜோன்ஸ் வெளிநாட்டுக்காரர் என்பதால் அவருக்கும் வாய்ப்பில்லை என்று தெரிகிறது. ஏனெனில் பாகிஸ்தான் அணிக்கு வெளிநாட்டு வீரர் பயிற்சியாளர் செட் ஆகவில்லை. எனவே கடந்த காலத்தை கருத்தில் கொண்டு, அதனடிப்படையில் டீன் ஜோன்ஸுக்கும் வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. 

அதனால் முன்னாள் கேப்டனும் சிறந்த வீரருமான மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.