பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியின் ஆட்டமும் செயல்பாடுகளும் அதிருப்தியளிக்கும் விதமாகவே இருந்தது. 

உலக கோப்பை லீக் சுற்றின் முதல் பாதியில் சரியாக ஆடாவிட்டாலும், பிற்பாதியில் அபாரமாக ஆடி தொடர் வெற்றிகளை குவித்தது. ஆனாலும் அந்த அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை. மிக்கி ஆர்துர் தலைமை பயிற்சியாளராக இருந்த காலக்கட்டத்தில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி சிறப்பாகவே செயல்பட்டு வெற்றிகளை பெற்றது. 

2017 சாம்பியன்ஸ் டிராபியை வென்றது, டி20 தரவரிசையில் முதலிடம் என நன்றாகவே ஆடியது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தரைமட்டத்திற்கு சென்றது. எனவே தற்போதைய பயிற்சியாளர் குழுவை மாற்றுவது என்பதில் உறுதியாக இருந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். அதனால் தான் மிக்கி ஆர்துர் பதவி நீட்டிப்பு கோரியும் அதை ஏற்க மறுத்தது. 

பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் விண்ணப்பித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட் குர்ட்னி வால்ஷ் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன. 

பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்ததால், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் எக்ஸிகியூடிவ் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மிஸ்பா உல் ஹக் விண்ணப்பித்துள்ளதால் அவர் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன. பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்காக ஒரு வீரராகவும் கேப்டனாகவும் மிகச்சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார் மிஸ்பா உல் ஹக்.

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள மிஸ்பா உல் ஹக், நான் விண்ணப்பிப்பதற்கு முன்னதாகவே எனது பெயர் ஊடகங்களில் அடிபட ஆரம்பித்துவிட்டது. கிரிக்கெட்டின் மிகவும் கடினமான ஒரு பொறுப்புக்கு கடும் போட்டி நிலவுகிறது. சில பெரிய பெயர்கள் அடிபடுவதால் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான போட்டி மிகக்கடுமையாக இருக்கும் என்று மிஸ்பா உல் ஹக் தெரிவித்தார்.