ஆஸி.,க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததன் விளைவாக, அடுத்த போட்டியில் தொடக்க வீரர், விக்கெட் கீப்பர் ஆகிய சில ரோல்களில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளன.

தொடக்க வீரர் பிரித்வி ஷாவுக்கு பதிலாக ஷுப்மன் கில்லை சேர்க்க வேண்டும் என்று கூறுவதை போலவே, விக்கெட் கீப்பர் ரிதிமான் சஹாவிற்கு பதிலாக ரிஷப் பண்ட்டை சேர்க்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்தன.

நல்ல விக்கெட் கீப்பர் என்ற முறையில், அந்த ரோலுக்கு சஹாவிற்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. ஆனால் ஸ்பின்னிற்கு ஒத்துழைக்காத, நல்ல ஃபாஸ்ட் பவுலிங் ஆடுகளங்களை கொண்ட ஆஸ்திரேலியாவில் ரிஷப் பண்ட்டையே விக்கெட் கீப்பராக எடுக்கலாம் என்று சில முன்னாள் வீரர்கள் கருத்து கூறிவரும் நிலையில், ரிதிமான் சஹாவையே விக்கெட் கீப்பராக தொடர வேண்டும் என்று மைக் ஹசி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மைக் ஹசி, சஹா மிகச்சிறந்த விக்கெட் கீப்பர்; நல்ல பேட்ஸ்மேனும் கூட. கடந்த காலங்களில், விக்கெட் கீப்பர் அடிக்கும் ரன்கள் எல்லாமே போனஸ் தான். விக்கெட் கீப்பர், கீப்பிங் நன்றாக செய்வதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும். இந்திய அணி நல்ல விக்கெட் கீப்பரை பெற்றிருக்கிறது. கீப்பிங்கில் முக்கியமான கேட்ச்சை கோட்டைவிட்டால், அதன் விளைவாக பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும். அதனால் நல்ல விக்கெட் கீப்பர் என்ற முறையில், சஹாவே அடுத்தடுத்த போட்டிகளிலும் ஆட வேண்டும் என்று மைக் ஹசி கருத்து தெரிவித்துள்ளார்.