இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது. இந்நிலையில் புதிய பயிற்சியாளர்கள் பதவிக்காக விண்ணப்பிக்க பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டது. 

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் தான் தற்போதிருக்கும் பயிற்சியாளர் குழுவிற்கு கடைசி  தொடர். இந்நிலையில், புதிய பயிற்சியாளருக்கான பதவிக்கு பலர் விண்ணப்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவருகிறது. இந்திய அணியின் மிடில் ஆர்டர் உட்பட சில சிக்கல்களை கலைந்து இந்திய அணியை மேலும் வலுவாக்கும் பணி புதிய பயிற்சியாளராக வருபவருக்கு உள்ளது.

இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி மீண்டும் விண்ணப்பிப்பார். அதேபோல சன்ரைசர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய டாம் மூடியும் விண்ணப்பிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்காகத்தான் டாம் மூடி சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியதாக கூறப்பட்டது.

இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனேவும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இவை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. தற்போதைக்கு ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு ஜாண்டி ரோட்ஸ் விண்ணப்பித்திருப்பது மட்டுமே உறுதியாக தெரிந்த தகவல்.

இந்நிலையில், நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான மைக் ஹெசனும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக மைக் ஹெசன் 6 ஆண்டுகள் இருந்தார். இவர் பயிற்சியாளராக இருந்த சமயத்தில்தான் 2015ம் ஆண்டு உலக கோப்பையில் இறுதி போட்டி வரை நியூசிலாந்து அணி சென்றது. நியூசிலாந்து அணிக்கு மைக் ஹெசன் சிறப்பான பங்காற்றினார். 

இந்நிலையில், அவரும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஜெயவர்தனே, டாம் மூடி, மைக் ஹெசன் என பெரிய பெரிய பெயர்கள் அடிபடுகின்றன. இவர்களெல்லாம் விண்ணப்பித்தால் பயிற்சியாளர் பதவிக்கான போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.