ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், அடிலெய்டு, சிட்னி, ஹோபார்ட், பெர்த் ஆகிய நகரங்களில் போட்டிகள் நடக்கவுள்ளன. உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. அனைத்து அணிகளுமே பேட்டிங் டெப்த்தை அதிகரிக்கும் நோக்கில், பல வீரர்களை பரிசோதித்துவருகின்றன. 

அனைத்து அணிகளுமே தீவிரமாக தயாராகிவரும் நிலையில், டி20 உலக கோப்பையை எந்த அணி வெல்லும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் ஆருடம் தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் டி20 உலக கோப்பையை வெல்லும் என மைக்கேல் வான் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலிய அணியின் வார்னர், ஃபின்ச், ஸ்மித் என அந்த அணியின் டாப் ஆர்டர்கள் செம ஃபார்மில் இருப்பதுடன் மிடில் ஆர்டரில் டர்னர், அகர், அலெக்ஸ் கேரி ஆகியோர் வலு சேர்க்கின்றனர். மேக்ஸ்வெல்லும் திரும்பி வந்துவிட்டால் அந்த அணியின் லெவவே வேறு. அதுமட்டுமல்லாமல் டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். பவுலிங்கிலும் ஸ்டார்க், கம்மின்ஸ், ரிச்சர்ட்ஸன் என அந்த அணி சிறந்து விளங்குகிறது. 

இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ, ராய், வின்ஸ், மோர்கன், பட்லர், பென் ஸ்டோக்ஸ், டேவிட் மாலன் என ஒரு பெரிய அதிரடி பட்டாளமே உள்ளது. நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி டி20 தொடரை வென்றுள்ளது இங்கிலாந்து. ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்ற அதே உத்வேகத்துடன் அந்த அணி டி20 உலக கோப்பையையும் எதிர்கொள்ளும். எனவே ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு வாய்ப்பிருக்கிறது என மைக்கேல் வான் கூறியிருக்கிறார். 

ஆனால் அவர் இந்தியாவை விட்டுவிட்டார். இந்திய அணியும் சளைத்தது அல்ல. ரோஹித், கோலி என்ற இருபெரும் ஜாம்பவான்கள் உள்ளனர். இவர்கள் தவிர்த்து ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா ஆகிய அதிரடி வீரர்கள் உள்ளனர். வாஷிங்டன் சுந்தரும் சூப்பராக பேட்டிங் ஆடுகிறார். ஷிவம் துபே ஆல்ரவுண்டராக அசத்துகிறார். இந்திய அணியை எந்த சூழலில் இருந்தும் மீட்டெடுக்க பும்ரா இருக்கிறார். டெத் ஓவர் கிங் பும்ரா, எதிரணிகளை தனது வேகத்தில் மிரட்டிவிடுவார். எனவேஇந்திய அணிக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் மைக்கேல் வான் இந்திய அணியை சொல்லவில்லை.