உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பையில் ஆடும் அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு தீவிரமாக தயாராகிவருகின்றன. இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 2 அணிகளில் ஒன்றுதான் இந்த உலக கோப்பையை வெல்லும் என்று பல முன்னாள் வீரர்கள் ஆருடம் தெரிவித்துள்ளனர். 

இதுவரை ஒருமுறை கூட உலக கோப்பையை வென்றிராத இங்கிலாந்து அணி இம்முறை கண்டிப்பாக கோப்பையை வெல்லும் என பல ஜாம்பவான்கள் அறுதியிட்டு கூறும் அளவிற்கு வெகுண்டெழுந்துள்ளது. இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் கடும் ஆக்ரோஷத்துடன் ஆடிவருகிறது. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே மிரட்டுகிறது. இங்கிலாந்தில் உலக கோப்பை நடப்பதால் இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் அந்த அணி உள்ளது. 

கிரிக்கெட் உலகில் ஹாட் டாபிக்காக உலக கோப்பையும் இங்கிலாந்து அணியும் பேசப்பட்டுவரும் நிலையில், ஆல்டைம் சிறந்த இங்கிலாந்து ஒருநாள் அணியை முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் தேர்வு செய்துள்ளார். 

ஆல்டைம் சிறந்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக தற்போதைய அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். மூன்றாம் வரிசை வீரராக ஜோ ரூட்டையும் நான்காம் வரிசை வீரராக முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சனையும் தேர்வு செய்துள்ளார் மைக்கேல் வாஹன். 

5ம் வரிசை வீரராக இயன் மோர்கனை தேர்வு செய்துள்ள வாஹன், மோர்கனையே அந்த அணிக்கு கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார். ஜோஸ் பட்லரை 6ம் வரிசை வீரராக தேர்வு செய்துள்ளார். மொயின் அலி, ஃப்ளிண்டாஃப், இயன் போத்தம் ஆகிய மூவரையும் ஆல்ரவுண்டர்களாகவும் தேர்வு செய்துள்ளார். ஃபாஸ்ட் பவுலராக டேரன் காஃப் மற்றும் ஸ்பின்னராக அடில் ரஷீத் ஆகிய இருவரையும் சேர்த்துள்ளார் வாஹன். 

மைக்கேன் வாஹன் தேர்வு செய்துள்ள ஆல்டைம் பெஸ்ட் இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், கெவின் பீட்டர்சன், இயன் மோர்கன்(கேப்டன்), ஜோஸ் பட்லர், மொயின் அலி, இயன் போத்தம், ஃப்ளிண்டாஃப், அடில் ரஷீத், டேரன் காஃப்.