கொரோனா ஊரடங்கால் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் இல்லாததால் முன்னாள், இந்நாள் வீரர்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். எனவே தங்களுக்குள் சமூக வலைதளங்களில் உரையாடுவது அல்லது வீடியோ காலில் ஸ்போர்ட்ஸ் இணையதளங்களுக்கு பேட்டியளிப்பது அல்லது ரசிகர்களின் கேள்விகளுக்கு டுவிட்டரில் பதிலளிப்பது என பொழுதுபோக்கிவருகின்றனர். 

அந்தவகையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், கிரிக்பஸ் ஸ்போர்ட்ஸ் இணையதளத்திற்கு பேட்டியளித்தார். அப்போது, தற்போதைய இந்திய வீரர்களில் அவருக்கு மிகவும் பிடித்த 3 வீரர்கள் யார் என்று கேள்வியெழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த மைக்கேல் வான், நிறைய இந்திய வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் விராட் கோலி தான் முதல் வீரர். நான் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், இந்தியா ஆடும் போட்டி.. அதுவும் சேஸிங் என்றால், கோலிதான் ஸ்பெஷலிஸ்ட். வெஸ்ட் இண்டீஸோ அல்லது வேறு எங்கோ நான் இருக்கிறேன்.. அப்போது இந்தியா 300க்கும் அதிகமான இலக்கை விரட்டுகிறது. கோலி 60-70 நாட் அவுட் என்றார்கள். போட்டி முடியும்போது, கோலி 130 ரன்கள்.. இந்தியா வெற்றி. அதுதான் கோலி..

அடுத்த இரண்டு பேட்ஸ்மேன்கள் கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா. கேஎல் ராகுல், மிக அருமையான பேட்ஸ்மேன். அசாத்தியமான ஆட்டக்காரர். பேட்டிங்கை இவ்வளவு ஈசியா என்று கருதுமளவிற்கு ஆடக்கூடியவர்.

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரில் ரோஹித்தை இந்திய அணி எடுக்கவில்லை. அப்போது நான் இந்திய அணிக்கு ஒரு டுவீட் செய்தேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித்தால் அபாரமாக ஆடமுடியும். அண்மையில் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரால் என்ன செய்யமுடியும் என நிரூபித்து காட்டினார் என்று மைக்கேல் வான் தெரிவித்தார்.