ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும் ஒன்று. தோனியின் கேப்டன்சியில் 3 முறை கோப்பையை வென்றது சிஎஸ்கே அணி. சிஎஸ்கே அணியை ஐபிஎல் தொடங்கிய 2008ம் ஆண்டிலிருந்து வழிநடத்திவரும் தோனி, பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் அந்த அணிக்கு அளப்பரிய பங்காற்றியிருக்கிறார்.

கடந்த ஆண்டே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட தோனி, ஐபிஎல்லில் மட்டும் ஆடிவருகிறார். கடந்த ஐபிஎல் சீசன் அவருக்கு சரியாக அமையவில்லை. எனவே இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக மீண்டும் சிறப்பாக செயல்பட்டு, அணியை வெற்றிப்பாதையில் நடத்திவிட்டு ஓய்வுபெற்றுவிடும் எண்ணத்தில் இருப்பதாக தெரிகிறது.

தோனி அடுத்த சீசனில் ஆடுவது சந்தேகம் தான். தோனி இல்லாத சிஎஸ்கே அணியை பற்றி யோசிப்பதே அந்த அணியின் ரசிகர்களுக்கு கொடுங்கனவாகத்தான் இருக்கும். ஆனால் ரசிகர்கள் மட்டுமல்லாது அந்த அணி நிர்வாகமும் அதைப்பற்றி யோசித்துத்தான் ஆக வேண்டும். ஐபிஎல் தொடங்கியதிலிருந்து தோனியை சுற்றியே இயங்கிவந்த சிஎஸ்கே அணி, அவருக்கு பின் யாரைச்சுற்றி இயங்கப்போகிறது என்பதுதான் கேள்வி.

அதுகுறித்து பேசியுள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், தோனி இன்னும் 2-3 சீசன்கள் ஆடுவார் என்று சிலர் சொல்லலாம். ஆனால் கண்டிப்பாக இதுதான் தோனியின் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கும். எனவே தோனி இல்லாத சிஎஸ்கே அணியை கட்டமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். என்னை பொறுத்தமட்டில் ஜடேஜாவை சுற்றி சிஎஸ்கே அணியை கட்டமைக்கலாம். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே அபாரமாக செயல்படக்கூடியவர் ஜடேஜா. அவரது மனநிலையும் மிகச்சிறப்பாக உள்ளது. எனவே ஜடேஜாவை சுற்றியே அணியை கட்டமைக்க வேண்டும் என்று மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.