விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகிய நால்வரும் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக அறியப்படுகின்றனர். இவர்கள் வரிசையில் பாகிஸ்தானின் பாபர் அசாமும் இணைந்துவிட்டார். 

25 வயதான இளம் வீரரான பாபர் அசாம், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 விதமான போட்டிகளிலும் தொடர்ச்சியாக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்துவருகிறார். உலகின் அனைத்து நாட்டு கண்டிஷன்களிலும், தரமான ஃபாஸ்ட் பவுலிங் மற்றும் ஸ்பின் பவுலிங் ஆகிய இரண்டையுமே மூன்று விதமான போட்டிகளிலும் சிறப்பாக ஆடி சமகாலத்தின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டரில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியின், முதல் நாள் ஆட்டத்தில்(நேற்று) பாதி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. ஆனாலும் மழை தொந்தரவுக்கு இடையேயும், முதல் நாள் ஆட்டத்தில் தான் ஆடிய 100 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 69 ரன்களை விளாசி அசத்தினார்.

கவர் டிரைவ், ஸ்டிரைட் டிரைவ் ஆகிய டிரைவ் ஷாட்டுகளை மிகத்தெளிவாகவும் அருமையாகவும் ஆடக்கூடிய டெக்னிக்கலாக மிகச்சிறந்த பேட்ஸ்மேனான பாபர் அசாம், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகிய அனுபவ பவுலர்கள் மற்றும் ஆர்ச்சரின் இளம் துடிப்பான வேகம், கிறிஸ் வோக்ஸ் மற்றும் டோமினிக் பெஸ் ஆகிய அனைவரது பவுலிங்கையும் திறம்பட எதிர்கொண்டு அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்து அசத்தினார். இங்கிலாந்து கண்டிஷனில், ஆண்டர்சன் - பிராட் ஃபாஸ்ட் பவுலிங் ஜோடி மீது ஆதிக்கம் செலுத்தி ஆடுவது மிகக்கடினமான காரியம். அதை செய்துகாட்டினார் பாபர் அசாம். 

பாபர் அசாமின் அருமையான பேட்டிங்கை கண்ட இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், பாபர் அசாமை வெகுவாக புகழ்ந்துள்ளார். சமகாலத்தின் சிறந்த பேட்ஸ்மேன்களாக அறியப்படும் நால்வரில் ஜோ ரூட்டை தூக்கிவிட்டு அந்த இடத்தை பாபர் அசாம் பிடித்துவிட்டதாக மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். 

பாபர் அசாம் குறித்து கிரிக்பஸ் இணையதளத்துக்கு பேசிய மைக்கேல் வாகன், பாபர் அசாம் அருமையான வீரர். ஆரம்பத்தில் சில பந்துகளில் அவர் திணறியபோது, இவரால் ஸ்விங்கை எதிர்கொள்ள முடியுமா என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கும். ஆனால் திடீரென ஃபார்முக்கு வந்த பாபர் அசாம், பவுலர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி ஆட தொடங்கினார். அவரது பேலன்ஸ், இறங்கிவந்து ஆடியது, ஆண்டர்சனின் பந்தில் பேக்ஃபூட் பன்ச் என அசத்திவிட்டார்.

அருமையான கவர் டிரைவ், மிட் விக்கெட் திசையில் அடித்த ஷாட் என மிகச்சிறப்பான ஆடினார் பாபர் அசாம். சமகாலத்தின் சிறந்த பேட்ஸ்மேன்களாக விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகிய நால்வரும் அறியப்படுகின்றனர். இவர்களில் ஜோ ரூட்டை அதிலிருந்து ஓரங்கட்டி அந்த இடத்தை பாபர் அசாம் பிடித்துவிட்டார். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பாபர் அசாமின் பேட்டிங் சராசரி 65 ஆகும். இவரை விட வேறு எந்த பேட்ஸ்மேனும் அதிக சராசரி வைத்திருக்கவில்லை. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பாபர் அசாம் பேட்டிங்கில் கொஞ்சம் கொஞ்சமாக மேம்பட்டுவருகிறார் என்று பாபர் அசாமை புகழ்ந்து தள்ளினார் மைக்கேல் வாகன்.