ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. வரும் 20ம் தேதி அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்கின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அனைவரும் அந்த நெறிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும்.

சிஎஸ்கே அணி மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கிளம்புவதற்கு முன்பாக, சென்னையில் ஒரு வாரம் வீரர்களுக்கு பயிற்சி முகாம் நடத்துகிறது. தோனி, ரெய்னா, பியூஷ் சாவ்லா, தீபக் சாஹர், கரன் ஷர்மா உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் சென்னையில் பயிற்சி முகாமை தொடங்கியுள்ளனர். 

இந்நிலையில், தோனியின் பேட்டிங் ஆர்டர் குறித்து அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி கருத்து தெரிவித்துள்ளார். தோனி கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஆடியதற்கு பின்னர், ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. எனவே தோனியை மீண்டும் களத்தில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில், தோனியின் பேட்டிங் ஆர்டர் குறித்து மைக் ஹசி கூறியுள்ள கருத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 

தோனி பெரும்பாலும் தனக்கென்று ஒரு பேட்டிங் ஆர்டரை நிரந்தரமாக வைத்துக்கொள்வதில்லை. இந்திய அணியிலும் சரி, சிஎஸ்கேவிலும் சரி, சூழலுக்கு ஏற்ப தான் களமிறங்குவார். நிரந்தரமாக ஒரு பேட்டிங் ஆர்டரில் ஆடமாட்டார். சிஎஸ்கேவில் பெரும்பாலும் ராயுடு, ரெய்னா ஆகிய வீரர்கள் 3, 4ம் வரிசைகளில் ஆடுவதால், தோனி 5 அல்லது 6ம் வரிசைகளில் தான் இறங்குவார். அதனால் தோனிக்கு நீண்ட நேரம் பேட்டிங் ஆடும் வாய்ப்பு அரிதாகத்தான் கிடைக்கும். பெரும்பாலும் ஃபினிஷிங் வேலையைத்தான் செய்வார். 

இந்நிலையில், ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி, தோனியின் பேட்டிங் ஆர்டர் குறித்து கருத்து தெரிவித்தார். இதுகுறித்து பேசிய ஹசி, 4ம் வரிசை தான் தோனிக்கு ஏற்றதாக இருக்கும். தோனி முன்வரிசையில் இறங்கினால் அது அணிக்கும் சாதகமாக அமையும். ஆனால் மிடில் ஆர்டரை பொறுத்தமட்டில் சூழலுக்கு ஏற்பத்தான் முடிவுகள் அமையும். இப்போதைக்கு முன் தயாரிப்புக்கான கட்டத்தில் தான் இருக்கிறோம். அணியின் மற்ற விஷயங்கள் இப்போதைக்கு எதுவும் தெரியவில்லை என்றார் ஹசி.

தோனி 4ம் வரிசையில் இறங்கினால், நீண்ட நேரம் பேட்டிங் ஆடுவார். எனவே அப்படி இறங்கினால் நன்றாக இருக்கும் என தோனி ரசிகர்கள் விரும்புகின்றனர். ஆனால் தோனி என்ன முடிவெடுக்கிறார், அணியின் திட்டம் என்ன என்பதையெல்லாம் பொறுத்துத்தான் பேட்டிங் ஆர்டர் இருக்கும்.