உலக கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. 

கடைசி இரண்டு லீக் போட்டிகள் புள்ளி பட்டியலில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இலங்கையை வீழ்த்திய இந்திய அணி 15 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடிக்க, ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவிடம் தோற்றதால் 14 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திற்கு பின் தங்கியது. 

எனவே புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணிக்கும் நான்காமிடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையேயான முதல் அரையிறுதி போட்டி மான்செஸ்டரில் இன்று நடக்கிறது. 

இந்த போட்டி நடப்பதற்கு முன்னதாகவே இந்திய அணி ஃபைனலில் ஒரு காலை வைத்துவிட்டதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். இந்தியா டுடேவிற்கு பேசிய கிளார்க், இந்திய அணி இறுதி போட்டிக்குள் நுழைந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். கிரிக்கெட்டில் இதுபோன்ற கணிப்புகளை தெரிவிக்க முடியாது. நான் ஒரு இந்திய வீரராகவோ அல்லது விராட் கோலியாகவோ இருந்தால் இந்த ஸ்டேட்மெண்ட்டை சொல்ல மாட்டேன். ஆனால் வெளியிலிருந்து பார்க்கும் ஒருவனாக சொல்கிறேன், இந்திய அணி அபாரமாக ஆடிவருகிறது. என்னை பொறுத்தவரை இந்திய அணி இறுதி போட்டியில் ஏற்கனவே ஒரு காலை வைத்து விட்டது.

இந்திய அணி சிறந்த கிரிக்கெட்டை ஆடிவருகிறது. அதேநேரத்தில் தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள நியூசிலாந்து அணி, நம்பிக்கையை சற்று இழந்து தளர்ந்து போயிருக்கும். அதுதான் நியூசிலாந்து அணிக்கு இந்தியாவுக்கு எதிரான போட்டியை கடினமானதாக்கும் என்று மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.