இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 150 ரன்கள் மட்டுமே அடித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் அபாரமாக ஆடி 243 ரன்களை குவித்தார். அவரது மிகச்சிறப்பான இன்னிங்ஸின் விளைவாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 493 ரன்களை குவித்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி வெறும் 213 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. 

இந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும்(தனித்தனியாக) வங்கதேச அணி, மயன்க் அகர்வாலை விட குறைந்த ஸ்கோரையே அடித்தது. மயன்க் அகர்வால் ஒரு இன்னிங்ஸில் அடித்த ஸ்கோரைவிட, இரண்டு இன்னிங்ஸில் ஒன்றில் கூட வங்கதேச அணி அதிகமாக அடிக்கவில்லை. இதன்மூலம் இதே சம்பவத்தை இதற்கு முன் செய்துள்ள வினூ மன்கத், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரின் பட்டியலில் மயன்க் அகர்வாலும் இணைந்துள்ளார். 

1. 1955ல் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் இந்திய வீரர் வினூ மன்கத் ஒரு இன்னிங்ஸில் 231 ரன்கள் அடித்தார். அந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 209 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 219 ரன்களும் அடித்தது. 

2. 2003ம் ஆண்டு ராவல்பிண்டியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் ராகுல் டிராவிட் ஒரு இன்னிங்ஸில் 270 ரன்கள் அடித்தார். அந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 224 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 245 ரன்களூம் மட்டுமே அடித்தது. 

3. 2004ம் ஆண்டு தாக்காவில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் சச்சின் டெண்டுல்கர் 248 ரன்கள் அடித்தார். அந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 184 ரன்கள் அடித்த வங்கதேச அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 202 ரன்கள் மட்டுமே அடித்தது. 

4. 2017ல் நாக்பூரில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் கேப்டன் விராட் கோலி 213 ரன்கள் அடித்தார். அந்த போட்டியில் இலங்கை அணி 205(முதல் இன்னிங்ஸ்) ரன்கள், மற்றும் 166(இரண்டாவது இன்னிங்ஸ்) ரன்கள் மட்டுமே அடித்தது. 

5. அண்மையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ராஞ்சியில் நடந்த டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா 212 ரன்கள் அடித்தார். அந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 162 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 133 ரன்களும் மட்டுமே அடித்தது தென்னாப்பிரிக்கா. 

இந்த வீரர்களின் வரிசையில் தற்போது மயன்க் அகர்வாலும் இணைந்துள்ளார். 

6. மயன்க் அகர்வால், வங்கதேசத்துக்கு எதிரான இந்த போட்டியில் 243 ரன்களை குவித்தார். முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு சுருண்ட வங்கதேச அணி, இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 213 ரன்கள் மட்டுமே அடித்தது.