இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்துவருகிறது. நேற்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும் மயன்க் அகர்வாலும் சிறப்பாக ஆடி இந்திய அணிக்கு வெகு சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்துள்ளனர். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்முறையாக தொடக்க வீரராக இறங்கிய ரோஹித் சர்மாவின் மீது அனைவரின் கவனமும் இருக்க, அவர் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. டெஸ்ட் அணியில் தனது இடத்தை தக்கவைக்க இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்ந்த ரோஹித் சர்மா, தொடக்கம் முதலே நிதானமாகவும் அதேநேரத்தில் அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தும் ஸ்கோரை உயர்த்தினார். 

தனது அனுபவத்தை பயன்படுத்தி முதிர்ச்சியான மற்றும் நேர்த்தியான ஆட்டத்தை ஆடிய ரோஹித் சர்மா, முதல் நாளான நேற்றைய ஆட்டத்திலேயே சதமடித்தார். அவர் சதத்தை கடந்தும் மயன்க் அகர்வால் சதத்தை நெருங்கிய நிலையில், நேற்றைய ஆட்டம், மழை காரணமாக டீ பிரேக்குடன் ஆட்டம் தடைபட்டது. நேற்றைய ஆட்டம் முடியும்போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் அடித்திருந்தது. 

இரண்டாம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மயன்க் அகர்வால் சதத்தை எட்டினார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமான மயன்க் அகர்வால், தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். மயன்க் அகர்வால் சதத்தை எட்ட, அபாரமாக ஆடிவரும் ரோஹித் சர்மா 150 ரன்களை கடந்தார். 

இருவருமே களத்தில் நன்றாக செட்டில் ஆகிவிட்டதால், தென்னாப்பிரிக்க பவுலர்களின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகின்றனர். முதல் விக்கெட்டையே வீழ்த்த முடியாமல் தென்னாப்பிரிக்க அணி திணறிவருகிறது. ரோஹித் சர்மாவிற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தை விளாச அருமையான வாய்ப்பு இது.