இந்தூரில் 14ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியை வெறும் 150 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி. இதையடுத்து முதல் நாள் ஆட்டத்தின் மூன்றாவது செசனில் முதல் இன்னிங்ஸை தொடங்கியது இந்திய அணி.

இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா வெறும் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் மயன்க் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்த புஜாரா, வழக்கத்திற்கு மாறாக களமிறங்கியது முதலே அடித்து ஆடினார். அதிரடியாக ஆடி பவுண்டரிகளாக விளாசிய புஜாரா, தனது அதிரடியான பேட்டிங்கால் அனைவருக்கு ஆச்சரியமளித்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்திருந்தது.

இரண்டாம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கியதும் அரைசதம் அடித்த புஜாரா, 54 ரன்களில் ஆட்டமிழந்தார். 72 பந்துகளில் 54 ரன்கள் அடித்து அவுட்டானார் புஜாரா. அதன்பின்னர் மயன்க் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி, யாருமே எதிர்பார்த்திராத வகையில், இரண்டாவது பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் மயன்க் அகர்வால் நிலைத்து நின்று பொறுப்புடன் ஆடினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ரஹானேவும் சிறப்பாக ஆடினார். இருவரும் இணைந்து அபாரமாக ஆடிவருகின்றனர். சிறப்பாக ஆடிய மயன்க் அகர்வால், இந்த போட்டியிலும் சதமடித்தார். அவரை தொடர்ந்து ரஹானேவும் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

சதத்திற்கு பிறகும் மயன்க் அகர்வால் அபாரமாக ஆடிவருகிறார். ரஹானேவும் தொடர்ந்து சிறப்பாக ஆடிவருகிறார். இந்திய அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்களை கடந்து ஆடிவருகிறது. வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 150 ரன்களே அடித்த நிலையில், இந்திய அணி, தற்போதே சுமார் 100 ரன்கள் முன்னிலையில் உள்ளது. எனவே வலுவான நிலையில் இருக்கும் இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் மெகா ஸ்கோரை அடிக்கும்பட்சத்தில் இன்னிங்ஸ் வெற்றி உறுதி.