இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நேற்று தொடங்கியது. 

ஜமைக்காவின் கிங்ஸ்டனில் நடந்துவரும் இந்த போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுலும் மயன்க் அகர்வாலும் களமிறங்கினர். 

இருவரும் நிதானமாகவும் தெளிவாகவும் தொடங்கினர். ஆனாலும் கேஎல் ராகுல் நிலைக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டரின் அருமையான ஒரு பந்தில் முதல் ஸ்லிப்பிடம் கேட்ச் கொடுத்து ராகுல் 13 ரன்களில் வெளியேறினார். அதன்பின்னர் களத்திற்கு வந்த புஜாரா, இந்த முறையும் ஏமாற்றமளித்தார். புஜாரா வெறும் 6 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் மயன்க் அகர்வாலுடன் கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தார். 

முதல் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சரியாக ஆடாத மயன்க் அகர்வால், இந்த முறை அரைசதம் அடித்து அசத்தினார். ஆனால் நல்ல ஸ்டார்ட் கிடைத்தும் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் 55 ரன்களில் அவரும் ஹோல்டரின் பந்தில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் கேப்டன் கோலியுடன் துணை கேப்டன் ரஹானே ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், 9 ஓவர்களுக்கும் மேலான பந்துகளை பேட்டிங் ஆடி நன்றாக தொடங்கிய ரஹானேவும் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றவில்லை. 24 ரன்களில் ரஹானே கீமார் ரோச்சின் பந்தில் ஆட்டமிழந்தார். 

அரைசதம் அடித்த கோலி, 76 ரன்களில் ஆட்டமிழக்க, ஹனுமா விஹாரியும் ரிஷப் பண்ட்டும் இணைந்து சிறப்பாக ஆடினர். முதல் போட்டியில் நன்றாக ஆடிய ஹனுமா விஹாரி, இம்முறையும் நன்றாகவே ஆடிவருகிறார். முதல் போட்டியில் சரியாக ஆடாத ரிஷப் பண்ட்டுக்கும் நல்ல ஸ்டார்ட் கிடைத்துள்ளது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் அடித்துள்ளது. ஹனுமா விஹாரி 42 ரன்களுடனும் ரிஷப் பண்ட் 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

ஹனுமா விஹாரியும் ரிஷப் பண்ட்டும் இரண்டாம் நாளான இன்றைய ஆட்டத்திலும் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தால் இந்திய அணி நல்ல ஸ்கோரை அடிக்க வாய்ப்புள்ளது. அவர்கள் இருவரும் பெரிய இன்னிங்ஸ் ஆடினால் அது அவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும்.