இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 2வது டி20 போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்ய பணித்தார்.  ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச் இந்த போட்டியில் ஆடாததால், கேப்டன்சி பொறுப்பை ஏற்று செயல்படும் மேத்யூ வேட் தான் தொடக்க வீரராக களமிறங்கினார்.

மேத்யூ வேடும் ஷார்ட்டும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். மேத்யூ வேட் தொடக்கம் முதலே அடித்து ஆட ஆரம்பித்தார். தீபக் சாஹர், ஷர்துல் தாகூர் ஆகியோரின் பவுலிங்கில் பவுண்டரிகளை விளாசிய மேத்யூ வேட், 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 25 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் ஷார்ட் நிதானமாக ஆடிக்கொண்டிருக்க, ஐந்தாவது ஓவரை தனது முதல் ஓவராக வீசிய நடராஜன், ஷார்ட்டை 9 ரன்களுக்கு வீழ்த்தினார். இதையடுத்து மேத்யூ வேடுடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார்.

அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த மேத்யூ வேட், வாஷிங்டன் சுந்தர் வீசிய 8வது ஓவரின் கடைசி பந்தில் கேட்ச் வாய்ப்பு கொடுத்தார். ஷார்ட் கவர் திசையில் நின்ற இந்திய கேப்டன் கோலி, அந்த கேட்ச்சை கோட்டைவிட்டார். இதற்கிடையே வேடும் ஸ்மித்தும் ரன் ஓட முயன்றனர். ஆனால் பாதி பிட்ச் வந்த மேத்யூ வேடை ஸ்மித் திருப்பியனுப்ப, அந்த டைமிங்கை பயன்படுத்தி கோலி விக்கெட் கீப்பர் ராகுலிடம் த்ரோ விட, அதை பிடித்து ஸ்டம்ப்பில் அடித்து மேத்யூ வேடை ரன் அவுட்டாக்கினார். ஸ்மித் பாதியில் திருப்பியனுப்பியதால் நன்றாக ஆடிக்கொண்டிருந்த வேட், 32 பந்தில் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல், 12 பந்தில் 2 சிக்ஸர்களுடன் 22 ரன்கள் அடித்து 13வது பந்தில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய ஸ்மித், 30 பந்தில் 30 ரன்கள் மட்டுமே அடித்திருந்த நிலையில், அடுத்த 7 பந்தில் பதினாறு ரன்கள் அடித்து, 38 பந்தில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹென்ரிக்ஸ் 26 ரன்களுக்கு 19வது ஓவரில் நடராஜனின் பந்தில் ஆட்டமிழக்க, கடைசி நேரத்தில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 7 பந்தில் ஒரு சிக்ஸருடன் 16 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 194 ரன்கள் அடித்த ஆஸ்திரேலிய அணி, 195 ரன்கள் என்ற சவாலான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.