பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அனில் தல்பாட்டுக்கு அடுத்து ஆடிய இந்து மதத்தை சேர்ந்த வீரர் டேனிஷ் கனேரியா. பாகிஸ்தான் அணியில் 2000ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை 61 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 261 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2012ம் ஆண்டு கவுண்டி கிரிக்கெட்டில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக்கூறி, கனேரியாவுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வாழ்நாள் தடை விதித்தது. 

அதன்பின்னர் கனேரியா இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனார். இந்நிலையில், கனேரியா ஆடிய காலத்தில், அவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால், அவரை சில பாகிஸ்தான் வீரர்கள் ஒதுக்கிவைத்ததாகவும் அவருடன் அமர்ந்து சாப்பிடக்கூட மறுத்ததாகவும் அக்தர் கூறியிருந்தார். 

இதையடுத்து, அக்தர் கூறியது உண்மைதான் எனவும், தான் ஒரு இந்து என்பதற்காக தன்னிடம் பாரபட்சம் காட்டி தன்னை ஒதுக்கிய வீரர்களின் பெயர்களை விரைவில் வெளியிடுவேன் எனவும் தெரிவித்த கனேரியா, அக்தருக்கு நன்றியும் தெரிவித்திருந்தார். கனேரியாவின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தன்னுடைய கேப்டன்சியில் ஆடிய கனேரியா மீது இப்படியான மதரீதியான பாகுபாடு நடந்திருக்க வாய்ப்பேயில்லை என்றும் கிரிக்கெட்டில் மதம் கலக்கவில்லை என்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்திருந்தார். 

இப்படியாக கடந்த சில தினங்களாக பெரும் பரபரப்பை கிளப்பியிருந்த கனேரியா, தான் ஒரு ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது யூடியூபில் பேசிய கனேரியா, நான் பிரபலத்திற்காகவும் எனது யூடியூப் பக்கத்தின் ப்ரமோஷனுக்காகவும்தான் இதையெல்லாம் பேசுகிறேன் என்று சொல்கிறார்கள். ஆனால் நானாக வந்து இதை சொல்லவில்லை என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். நான் எப்படி பாரபட்சத்துடன் நடத்தப்பட்டேன் என்பதை அக்தர் சொன்னபிறகே நான் பேசினேன். 

எனக்கு கை, கால்களை கட்டிப்போட்டுவிட்டீர்கள். கடந்த சில ஆண்டுகளாக எனக்கு எந்த வேலையும் இல்லை. உங்களுக்கு இன்னும் என்னதான் வேண்டும்? நான் பாகிஸ்தானுக்காக ஆடிய 10 ஆண்டுகளில் களத்தில் ரத்தம் சிந்தி ஆடியுள்ளேன். விரலில் காயத்துடன் ரத்தம் சொட்ட சொட்ட ஆடியுள்ளேன். காசுக்காக நாட்டை விற்ற வீரர்கள் பாகிஸ்தான் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டனர். நான் பணத்துக்காக அந்த மாதிரியெல்லாம் செய்ததில்லை என்று கனேரியா தெரிவித்துள்ளார்.