இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸி., அணி 20 ஓவரில் 195 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்டமுடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் அடித்துள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணியில் 4 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. கோலி மற்றும் ஷமிக்கு பதிலாக முறையே ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டனர். தொடக்க வீரர் பிரித்வி ஷாவுக்கு பதிலாக ஷுப்மன் கில்லும், விக்கெட் கீப்பர் ரிதிமான் சஹாவுக்கு பதிலாக ரிஷப் பண்ட்டும் சேர்க்கப்பட்டனர். 

ஷுப்மன் கில் மற்றும் முகமது சிராஜ் ஆகிய இருவருக்கும் இதுதான் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி. அறிமுக போட்டியிலேயே அதுவும் ஆஸ்திரேலிய மண்ணில் அபாரமாக பந்துவீசினார் முகமது சிராஜ். முதல் இன்னிங்ஸில் பதினைந்து ஓவர்கள் பந்துவீசி 40 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் சிராஜ்.

சிராஜின் முதல் விக்கெட்டே, ஆஸி., அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மார்னஸ் லபுஷேன். களத்தில் நிலைத்து நின்று சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த லபுஷேனை 48 ரன்களுக்கு வீழ்த்தினார் சிராஜ். அடுத்ததாக க்றிஸ் க்ரீனை வீழ்த்தினார்.

சிராஜின் பவுலிங் நன்றாக ஸ்விங் ஆன நிலையில், சிராஜின் பவுலிங்கில் தனது விக்கெட்டை இழந்த மார்னஸ் லபுஷேன், சிராஜை வெகுவாக புகழ்ந்துள்ளார். சிராஜ் குறித்து பேசிய மார்னஸ் லபுஷேன், இந்திய பவுலர்கள் ஸ்டிரைட்டாக பந்துவீசி, ஆஃப் திசையில் எங்களை ஸ்கோர் செய்யவிடாமல் தடுத்தனர். புதிய ஐடியாக்களுடன் வந்து எங்கள் மீது இன்றைக்கு அழுத்தம் போட்டனர். சிராஜ் சீம் பவுலர் அல்ல; நல்ல ஸ்விங் பவுலர். கிட்டத்தட்ட ஆறு அடி உயரம் இருக்கும் சிராஜ், இடது கை பேட்ஸ்மேன்களிடமிருந்து பந்தை வெளியே எடுத்து செல்கிறார். மிகச்சிறந்த திறமைசாலி அவர் என்று சிராஜை லபுஷேன் புகழ்ந்துள்ளார்.