தான் எதிர்கொண்டதிலேயே மிகக்கடினமான பவுலர் யார் என்று உலகின் நம்பர் 1 டெஸ்ட் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஷேன் தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. இந்த ஆஷஸ் தொடரில் அபாரமாக விளையாடிவரும் ஆஸ்திரேலிய அணி 3-0 என தொடரை வென்றுவிட்டது. நான்காவது டெஸ்ட் டிரா ஆனது. கடைசி டெஸ்ட் போட்டி ஹோபர்ட்டில் நடக்கிறது.

ஆஸ்திரேலிய அணி அபாரமாக ஆடிவரும் நிலையில், அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய மார்னஸ் லபுஷேன், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். 2019ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் கன்கஷனில் இருந்தபோது, அவருக்கு கன்கஷன் மாற்று வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான மார்னஸ் லபுஷேன், இரண்டரை ஆண்டில் 22 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2171 ரன்கள் அடித்துள்ளார்.

நடப்பு ஆஷஸ் தொடரில் அருமையாக ஆடி நம்பர் 1 டெஸ்ட் பேட்ஸ்மேனாக திகழும் மார்னஸ் லபுஷேன், இதுவரை அவரது கெரியரில் அவர் எதிர்கொண்ட கடினமான பவுலர் யார் என்ற ரசிகரின் கேள்விக்கு ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் என பதிலளித்துள்ளார் லபுஷேன்.

இங்கிலாந்தின் மிரட்டல் ஃபாஸ்ட் பவுலரான ஆர்ச்சர், 7 முறை லபுஷேனை வீழ்த்தியுள்ளார். உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னரான அஷ்வின், உலகின் எந்த பேட்ஸ்மேனுக்கும் எதிர்கொள்ள கடினமான பவுலரே. குறிப்பாக இந்தியாவில் அஷ்வினை எதிர்கொள்வது மிக மிகக்கடினம்.