உலக கோப்பையை வென்ற உத்வேகத்திலும் உற்சாகத்திலும் இங்கிலாந்து அணி, ஆஷஸ் தொடரை எதிர்கொள்ளவுள்ளது. அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணியும் வார்னர் மற்றும் ஸ்மித்தின் வருகையால் வலுப்பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி உலக கோப்பையை விட முக்கியமான தொடராக கருதுவது ஆஷஸ் தொடரைத்தான். இரு அணிகளுக்குமே ஆஷஸ் தொடர் என்பது ஈகோ பிரச்னை. இரு அணிகளுக்குமே இது முக்கியமான தொடர் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் ஆஷஸ் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டிம் பெய்ன் தலைமையிலான அணியில், ஸ்மித், வார்னர், உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், மார்கஸ் ஹாரிஸ் ஆகிய பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ளனர். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் மற்றும் வார்னருடன் தடை செய்யப்பட்ட பான்கிராஃப்ட்டுக்கு மீண்டும் அணியில் இடம் கிடைத்துள்ளது. 

மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், பாட்டின்சன், ஹேசில்வுட் ஆகியோர் ஃபாஸ்ட் பவுலர்களாக இடம்பெற்றுள்ளனர். உலக கோப்பையில் அசத்தலாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அலெக்ஸ் கேரிக்கு அணியில் இடம்கிடைக்கவில்லை. அதேபோல ஹேண்ட்ஸ்கம்ப்புக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை. 

உலக கோப்பையில் அபாரமாக ஆடிய அலெக்ஸ் கேரிக்கு ஆஷஸ் அணியில் வாய்ப்பு அளிக்கப்படாதது குறித்து முன்னாள் வீரர்கள் மார்க் வாக் மற்றும் ஷேன் வார்னே ஆகியோர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக ஆஷஸ் தொடருக்கான தனது ஆஸ்திரேலிய அணியை அறிவித்த ஷேன் வார்னே, ஆடும் லெவனில் அலெக்ஸ் கேரியை எடுத்திருந்தார். ஆனால் 17 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் கூட அவர் எடுக்கப்படவில்லை. 

அதனால் அலெக்ஸ் கேரி எடுக்கப்படாதது குறித்த அதிருப்தியை வார்னே வெளிப்படுத்தியுள்ளார். அவரைப்போலவே மார்க் வாகும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள டுவீட்டில், உலக கோப்பையில் அபாரமாக ஆடிய பிறகும் அலெக்ஸ் கேரி ஆஷஸ் தொடரில் புறக்கணிக்கப்பட்டிருப்பது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இவ்வளவுக்கும் அவர்தான் ஆஸ்திரேலியாவின் தற்போதைய இரண்டாவது சிறந்த விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரிதான் என்று மார்க் வாக் தெரிவித்துள்ளார்.