ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பிக்பேஷ் லீக்கில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி தான் ஆதிக்கம் செலுத்திவருகிறது. லீக் சுற்று நடந்துவரும் நிலையில், புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி, தொடர்ந்து சிறப்பாக ஆடிவருகிறது. 

சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இன்று, முதலில் பேட்டிங் ஆடிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் மார்கஸ் ஸ்டோய்னிஸின் அதிரடியான சதம் மற்றும் ஹில்டான் கார்ட்ரைட்டின் அரைசதம்  ஆகியவற்றால் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 219 ரன்களை குவித்தது. 

மெல்போர்னில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி, மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை முதலில் பேட்டிங் ஆட பணித்தது. ஸ்டார்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் மார்கஸ் ஸ்டோய்னிஸும் கார்ட்ரைட்டும் இணைந்து தெளிவாகவும் சிறப்பாகவும் பேட்டிங் ஆடினர். 

அதிரடியாக ஆடிய மார்கஸ் ஸ்டோய்னிஸ், அரைசதம் அடித்தார். கார்ட்ரைட்டைவிட அதிகமான பந்துகள் பேட்டிங் ஆடிய ஸ்டோய்னிஸ், சிக்ஸர்ஸ் அணியின் பந்துகளை அடித்து நொறுக்கினார். அரைசதத்துக்கு பின்னர் அதிரடியை அதிகப்படுத்திய மார்கஸ் ஸ்டோய்னிஸ் சதம் விளாசினார். முதல் விக்கெட்டையே போட முடியாமல் சிக்ஸர்ஸ் அணி திணறியது. 

ஸ்டோய்னிஸ் சதமடிக்க, கார்ட்ரைட்டும் அரைசதம் அடித்தார். 16வது ஓவரில் சதமடித்த ஸ்டோய்னிஸ், அதன்பின்னர் ருத்ரதாண்டவம் ஆடினார். ஹென்ரிக்ஸ் வீசிய 18வது ஓவரில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசிய ஸ்டோய்னிஸ், த்வர்ஷூயிஸ் வீசிய 19வது ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். 19 ஓவர் வரை சிக்ஸர் அணியால் முதல் விக்கெட்டையே வீழ்த்த முடியவில்லை. 

கடைசி ஓவரின் முதல் பந்தில்தான் முதல் விக்கெட்டே விழுந்தது. கார்ட்ரைட் 59 ரன்னில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ஸ்டோய்னிஸும் கார்ட்ரைட்டும் இணைந்து 207 ரன்களை குவித்தனர். இதுதான் பிக்பேஷ் லீக் வரலாற்றில், அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஸ்கோர் ஆகும். 

டாம் கரன் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் கார்ட்ரைட் அவுட்டாக, அந்த ஓவரில் மேக்ஸ்வெல் ஒரு பவுண்டரியும் ஸ்டோய்னிஸ் ஒரு சிக்ஸரும் விளாச, 20 ஓவரில் 219 ரன்களை குவித்தது ஸ்டார்ஸ் அணி. ஸ்டோய்னிஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 79 பந்தில் 147 ரன்களை குவித்தார்.