ஐபிஎல்லில் இதுவரை 12 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. அதில், அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும் சிஎஸ்கே 3 முறையும் அதற்கடுத்தபடியாக அதிகபட்சமாக கேகேஆர் அணி 2 முறையும் கோப்பையை வென்றுள்ளன. ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிகளுக்கு அடுத்த வெற்றிகரமான அணி கேகேஆர் அணி தான். 

கவுதம் கம்பீர் தலைமையிலான கேகேஆர் அணி, 2012 மற்றும் 2014 ஆகிய 2 சீசன்களிலும் கோப்பையை வென்றது. இதில் 2012ல் வென்ற டைட்டில் கேகேஆருக்கு ரொம்ப ஸ்பெஷலானது. 2010 மற்றும் 2011 ஆகிய இரண்டு சீசன்களிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் கோப்பையை வெல்லும் முனைப்பில் 2012 சீசனின் இறுதி போட்டியில் கேகேஆரை எதிர்கொண்டது சிஎஸ்கே. 

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் மே 27ம் தேதி நடந்த இறுதி போட்டியில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும் கம்பீர் தலைமையிலான கேகேஆர் அணியும் மோதின. 

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் மைக் ஹசி மற்றும் ரெய்னா ஆகிய இருவரின் அதிரடியான அரைசதத்தால் 20 ஓவரில் 190 ரன்களை குவித்தது சிஎஸ்கே அணி. 

191 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய கேகேஆர் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான கம்பீர் வெறும் 2 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனால் அதன்பின்னர் மன்வீந்தர் சிங் பிஸ்லாவும் ஜாக் காலிஸும் இணைந்து சிஎஸ்கேவின் பவுலிங்கை அடித்து ஆடி ஸ்கோரை மளமளவென  உயர்த்தினர். குறிப்பாக பிஸ்லாவின் பேட்டிங் அபாரமாக இருந்தது. அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய பிஸ்லா, 48 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 89 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 

பிஸ்லா 15வது ஓவரின் 4வது பந்தில் அணியின் ஸ்கோர் 139ஆக இருந்தபோது ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பொறுப்பை தனது தோள்களில் சுமந்து ஆடிய காலிஸ், அரைசதம் கடந்தார். 49 பந்தில் 69 ரன்களை குவித்த ஜாக் காலிஸ், 19வது ஓவரின் ஐந்தாவது பந்தில் ஆட்டமிழந்தார். அதற்கு முந்தைய ஓவரில் யூசுஃப் பதானும் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் கேகேஆர் அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. பரபரப்பான கடைசி ஓவரில் ஷகிப் அல் ஹசனும் மனோஜ் திவாரியும் இலக்கை எட்டி கேகேஆர் அணியை வெற்றி பெற செய்தனர். கடைசி ஓவரின் 4வது பந்தில் பவுண்டரி அடித்து மனோஜ் திவாரி தான் கேகேஆர் அணியை வெற்றி பெற செய்தார். இதையடுத்து முதல் முறையாக கேகேஆர் அணி கோப்பையை வென்றது. 

அந்த சீசனில் சுனில் நரைனின் சுழற்பந்துவீச்சு, கேகேஆர் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. 2012 ஐபிஎல் சீசனின் அந்த இறுதி போட்டி நடந்த தினம் மே 27(நேற்று). இதையடுத்து அந்த சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக, அந்த போட்டி குறித்த நினைவுகளை பகிருமாறு டுவிட்டரில் பதிவிட்ட கேகேஆர் அணி நிர்வாகம், கம்பீர், பிஸ்லா, மெக்கல்லம், சுனில் நரைன் ஆகியோரை டேக் செய்திருந்தது. 

அந்த டுவீட்டை கண்டு வேதனையடைந்த, அந்த வெற்றிக்கு காரணமானவர்களில் ஒருவரான மனோஜ் திவாரி, இந்த டுவீட்டில் எனது பெயரையும் ஷகிப் அல் ஹசன் பெயரையும் டேக் செய்யாமல் அசிங்கப்படுத்திவிட்டீர்கள் என்று மனோஜ் திவாரி தனது வேதனையை வெளிப்படுத்தியிருந்தார். 

அதற்கு, அப்படியெல்லாம் இல்லை.. 2012 ஐபிஎல் வெற்றியின் ஹீரோக்களில் நீங்களும் ஒருவர் திவாரி என்று கேகேஆர் அணி நிர்வாகம் டுவீட் செய்துள்ளது.