இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கபில் தேவ், கங்குலி, தோனி ஆகிய மூவரும் தான் மிக முக்கியமான மற்றும் வெற்றிகரமான கேப்டன்கள். இப்போது விராட் கோலி இந்த பட்டியலில் இடம்பெறுவதற்கான அனைத்து தகுதி மற்றும் திறமைகளுடன் போராடிவருகிறார்.

கவாஸ்கர், அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே ஆகியோரும் இந்திய அணியை கேப்டனாக இருந்து வழிநடத்தியிருக்கிறார்கள் என்றாலும், கபில் தேவ், கங்குலி, தோனி ஆகிய மூவரும் தான் சிறந்தவர்களாக அறியப்படுகின்றனர். 

இவர்களில் கங்குலியை தவிர மற்ற இருவரும் இந்திய அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுத்திருக்கின்றனர். கபில் தேவ் 1983ம் ஆண்டிலும் தோனி 2011ம் ஆண்டிலும் இந்திய அணிக்கு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்று கொடுத்தனர். ஆனாலும் அவர்களை விட கங்குலி தான் இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டன் என்று முன்னாள் வீரர் மனீந்தர் சிங், காரணத்துடன் கூறியுள்ளார். 

இதுகுறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் பேசிய மனீந்தர் சிங், கபில் தேவ் 1983ம் ஆண்டு இந்திய அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுத்தார். அதன்பின்னர் தோனி உலக கோப்பையை வென்றார். தோனிக்கு முன் இந்திய அணியின் கேப்டனாக கங்குலி இருந்தது, தோனிக்கு அடித்த அதிர்ஷ்டம். ஏனெனில், உலகின் எந்த கண்டிஷனிலும் எந்த அணியையும் வீழ்த்தி இந்திய அணியால் வெல்ல முடியும் என்ற நிலையை உருவாக்கி, நம்பிக்கையை கொடுத்தது கங்குலி தான். அதை தோனியும் அப்படியே தொடர்ந்தார். 

கபில் தேவிடம் அந்த நம்பிக்கை மிஸ் ஆனது. மற்றபடி நேர்மறையான சிந்தனை, நிதானம், கேப்டனுக்கான உள்ளுணர்வு ஆகியவற்றில் இருவருமே ஒரே மாதிரி தான். என்னை பொறுத்தமட்டில், கபில் தேவும் தோனியும் ஒரே மாதிரியானவர்கள். கபில் தேவ் சிறந்த கேப்டன் தான். அவருக்கு முன் யாரும் இந்திய அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுக்கவில்லை. கபில் தேவ், தோனி நல்ல கேப்டன்கள்.

ஆனால் எனக்கு கங்குலியின் கேப்டன்சி தான் ரொம்ப பிடிக்கும். அவர் மிகச்சிறந்த திறமைசாலிகளை அடையாளம் கண்டு இந்திய அணிக்கு கொடுத்துள்ளார். திறமைகளை கண்டறிவதில் கங்குலி அபாரமான திறமைசாலி. யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு ஆதரவாக இருந்து அவர்களை வளர்த்துவிட்டார்.

வீரேந்திர சேவாக், கவுதம் கம்பீர் ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பளித்து வளர்த்தார். ராகுல் டிராவிட்டை விக்கெட் கீப்பிங் செய்யவைத்தார். மிடில் ஆர்டரில் ஆடிய சேவாக்கை, தென்னாப்பிரிக்காவில் தொடக்க வீரராக இறக்கிவிட்டது கங்குலி தான். சேவாக் அந்த குறிப்பிட்ட தென்னாப்பிரிக்க தொடரில் சொதப்பினாலும், அவர் அணியிலிருந்து நீக்கப்படமாட்டார் என்ற உறுதியை சேவாக்கிற்கு அளித்து, அவருக்கு நம்பிக்கையும் ஊட்டி தொடக்க வீரராக இறக்கிவிட்டார் கங்குலி. இதுதான் ஒரு நல்ல தலைவனுக்கான அடையாளம். சேவாக், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், ஜாகீர் கான் என கங்குலி அடையாளம் கண்டு கொடுத்த வீரர்கள் ஏராளம்.

ஜாகீர் கானை கவுண்டி கிரிக்கெட்டில் ஆட அறிவுறுத்தியது கங்குலி தான். ஜாகீர் கான் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் ஆடிய பின்னர் தான் அவரது ஆட்ட முறையே மாறியது. அந்தவகையில் ஜாகீர் கானின் எழுச்சிக்கும் கங்குலியின் சரியான வழிகாட்டுதல் தான் காரணம்.  என்னை பொறுத்தமட்டில் மிகவும் நேர்மையாக சொல்கிறேன்.. பெஸ்ட் கேப்டன் கங்குலி தான் என்று மனீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.