நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய மலிங்கா, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார். 

இலங்கை - நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்த நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி, 20 ஓவர் முடிவில் 174 ரன்கள் அடித்தது. நியூசிலாந்து அணியின் டி கிராண்ட் ஹோம் மற்றும் டெய்லரின் அதிரடியான பேட்டிங்கால் நியூசிலாந்து அணி கடைசி ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் இலங்கை டி20 அணியின் கேப்டனும் சீனியர் பவுலருமான மலிங்கா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கோலின் முன்ரோவை வீழ்த்திய மலிங்கா, அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த டி கிராண்ட் ஹோமிற்கு ஸ்லோ யார்க்கரை போட்டு அவரை வீழ்த்தினார். மலிங்காவின் ஸ்பெஷலே அந்த துல்லியமான யார்க்கர் தான். சர்வதேச டி20 கிரிக்கெட்டில், அது மலிங்காவின் 99வது விக்கெட். 

இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற அஃப்ரிடியின்(98 விக்கெட்டுகள்) சாதனையை மலிங்கா முறியடித்துள்ளார். இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் பவுலர் என்ற மைல்கல்லை மலிங்கா எட்டிவிடுவார்.