2011 உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடந்தது. 1983ம் ஆண்டுக்கு பிறகு 28 ஆண்டுகள் கழித்து 2011 உலக கோப்பையை இந்தியா வென்றது. அந்த உலக கோப்பை தொடரின் இறுதி போட்டி மும்பை வான்கடேவில் நடந்தது. அந்த போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி, சங்கக்கரா தலைமையிலான இலங்கை அணியை வீழ்த்தி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, உலக கோப்பையை 28 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக வென்றது. 

மும்பை வான்கடேவில் நடந்த இறுதி போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி, ஜெயவர்தனேவின் அபாரமான சதத்தால் 50 ஓவர்களில் 274 ரன்களை குவித்தது. 275 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சச்சின் மற்றும் சேவாக் ஆகிய இருவரும் சோபிக்கவில்லை. 31 ரன்களுக்கே இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் அப்போதைய இளம் வீரர் கோலி, கம்பீருடன் இணைந்து சிறப்பாக ஆடி, மூன்றாவது விக்கெட்டுக்கு 83 ரன்களை சேர்க்க உதவினார். கோலி அவுட்டான பிறகு, கம்பீருடன் கேப்டன் தோனி ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார்.

அருமையாக ஆடிய கம்பீர், 97 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் தோனியும் யுவராஜும் சேர்ந்து இலக்கை 49வது ஓவரில் எட்டி இந்திய அணியை வெற்றி பெற செய்தனர். தோனி 91 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். குலசேகராவின் பந்தில் தோனி சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுத்த தருணத்தை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் என்றுமே மறக்கமாட்டார்கள். 

28 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக இந்திய அணி உலக கோப்பையை வென்றது. இந்திய கிரிக்கெட் அணிக்கு பெருமையான தருணம் அது. இந்நிலையில், 2011 உலக கோப்பை இறுதி போட்டி ஃபிக்ஸிங் செய்யப்பட்டது என்ற அபாண்டமான குற்றச்சாட்டை எந்தவித ஆதாரமும் இல்லாமல் முன்வைத்துள்ளார் இலங்கையின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், 2011 உலக கோப்பை இறுதி போட்டி ஃபிக்ஸிங் செய்யப்பட்டது. நான் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது நடந்த சம்பவம் அது. அதனால் எனது கருத்தில் எப்போதும் மாறமாட்டேன்; உறுதியாக இருப்பேன். எனக்கு பொறுப்புணர்வு இருக்கிறது. எனவே அதுகுறித்த ஆதாரங்களை வெளியிட முடியாது. 2011 உலக கோப்பை இறுதி போட்டியில் இலங்கை தான் வென்றிருக்க வேண்டியது. ஆனால் ஃபிக்ஸிங் செய்யப்பட்டுவிட்டது. கிரிக்கெட் வீரர்களை இந்த விவகாரத்தில் உள்ளே இழுக்க நான் விரும்பவில்லை. குறிப்பிட்ட சில குழுக்கள் இதில் ஈடுபட்டன என்று அவர் தெரிவித்திருக்கிறார். 

ஆதாரத்தை வெளியிடாமல் இப்படியொரு அபாண்டமான குற்றச்சாட்டை இலங்கையின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் முன்வைத்த நிலையில், அந்த போட்டியில் இலங்கை அணிக்காக ஆடி சதமடித்தவரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான ஜெயவர்தனே தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். 

இலங்கையில் தேர்தல் வரப்போகிறது அல்லவா..? அதுதான் சர்க்கஸை தொடங்கிவிட்டார்கள்.. ஃபிக்ஸிங்கில் ஈடுபட்ட வீரர்கள் பெயர் மற்றும் ஆதாரத்தை வெளியிடுங்கள் என்று முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவிற்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். 

இலங்கையில் வரும் ஆகஸ்ட் மாதம் அந்நாட்டின் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காகத்தான் இதுமாதிரியான சர்க்கஸை நடத்துகிறார்கள் என்று ஜெயவர்தனே விமர்சித்திருக்கிறார். இந்தியாவுக்கு எதிரான அந்த இறுதி போட்டியில் அபாரமாக ஆடிய ஜெயவர்தனே 88 பந்தில் 13 பவுண்டரிகளுடன் 103 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.