உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. தென்னாப்பிரிக்க அணி முதல் 2 போட்டிகளிலும் தோற்றுவிட்டது. இங்கிலாந்துக்கு எதிராக தோற்ற தென்னாப்பிரிக்கா, வங்கதேசத்துக்கு எதிராக நேற்று நடந்த போட்டியிலும் தோல்வியை தழுவியது. 

முதல் 2 போட்டிகளிலும் தோற்று, படுமோசமாக உலக கோப்பையை தொடங்கியுள்ள தென்னாப்பிரிக்க அணி, வரும் 5ம் தேதி அடுத்த போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கிறது. இந்திய அணிக்கு அதுதான் முதல் போட்டி. 

இந்திய அணியின் முதல் போட்டி என்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக உள்ளது. தென்னாப்பிரிக்க முதல் 2 போட்டிகளில் தோற்று துவண்டு போயுள்ளது. அடுத்த போட்டியில் இந்தியாவை எதிர்கொள்வதால் சற்று மனம் தளர்ந்தே இந்திய அணியை எதிர்கொள்ளும். அதை பயன்படுத்தி இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி ஆட வேண்டும்.

ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோற்றது மட்டுமல்லாமல், ஸ்டெய்ன் மற்றும் ஆம்லா ஆகிய இருவரும் காயத்தால் ஆடாத நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இங்கிடியும் காயமடைந்தார். ஸ்டெய்ன் தோள்பட்டை காயம் காரணமாக முதல் 2 போட்டிகளில் ஆடவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆர்ச்சரின் பவுன்சரில் அடி வாங்கிய தொடக்க வீரர் ஹாசிம் ஆம்லா, வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை. 

இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 7வது ஓவரை தனது 4வது ஓவராக வீசிய லுங்கி இங்கிடி, அந்த ஓவரை வீசும்போது காயமடைந்ததால், அத்துடன் பெவிலியன் திரும்பினார். அதன்பின்னர் அவர் பந்துவீசவில்லை. 10 நாட்களுக்கு இங்கிடி ஓய்வு எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆடமாட்டார். ஏற்கனவே 2 சீனியர் வீரர்கள் காயத்தால் ஆடமுடியாத நிலையில், இங்கிடியும் காயமடைந்திருப்பது தென்னாப்பிரிக்க அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. 

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஸ்டெய்னும் ஆம்லாவும் ஆடுவார்களா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.