லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி, தொடர்ச்சியாக 8 போட்டிகளில் தோற்றதால், ஐபிஎல் 15வது சீசனில் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து முதல் அணியாக தொடரைவிட்டு வெளியேறியது. 

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மும்பை வான்கடேவில் நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும் மோதின. இதற்கு முன் 7 போட்டிகளில் தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, முதல் வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்கியது. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), டிவால்ட் பிரெவிஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா,பொல்லார்டு, டேனியல் சாம்ஸ், ரித்திக் ஷோகீன், ரிலே மெரிடித், ஜெய்தேவ் உனாத்கத், ஜஸ்ர்ப்ரித் பும்ரா.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி, க்ருணல் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், துஷ்மந்தா சமீரா, ரவி பிஷ்னோய், மோசின் கான்.

முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணியில் ஒருமுனையில் கேஎல் ராகுல் நிலைத்து நின்று அடித்து ஆடிய நிலையில், மறுமுனையில் டி காக்(10), மனீஷ் பாண்டே(22), மார்கஸ் ஸ்டோய்னிஸ்(0) ஆகியோர் ஏமாற்றமளித்தனர்.

ராகுல் அடித்து ஆடினாலும், மறுமுனையில் மற்ற வீரர்களை அடிக்கவிடாமல் இழுத்துப்பிடித்து ஸ்கோரை கட்டுப்படுத்தினர் மும்பை பவுலர்கள். க்ருணல் பாண்டியா(1), தீபக் ஹூடா(10), ஆயுஷ் பதோனி(14) ஆகியோரும் ஆட்டமிழந்தனர். ஆனால் மறுமுனையில் நங்கூரம் போட்டு அடித்து ஆடிய ராகுல் சதமடித்தார். இந்த சீசனில் 2வது சதத்தை பதிவு செய்தார் ராகுல். 62 பந்தில் 103 ரன்களை குவித்தார் ராகுல். ஆனாலும் மற்ற வீரர்கள் சொதப்பியதால் 20 ஓவரில் 168 ரன்கள் மட்டுமே அடித்தது லக்னோ அணி.

169 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா தொடக்கம் முதலே அடித்து ஆடினார். ஆனால் மற்ற வீரர்களான இஷான் கிஷன், ப்ரெவிஸ், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சொதப்பினர். அதிரடியாக ஆடிய ரோஹித்தும் 39 ரன்களுக்கு வெளியேறினார். அதன்பின்னர் சிறப்பாக விளையாடிய திலக் வர்மாவும் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பொல்லார்டு 19 ரன்கள் மட்டுமே அடித்தார். மும்பை அணி வீரர்கள் பேட்டிங்கில் மீண்டுமொரு முறை சொதப்பியதால் 20 ஓவரில் 132 ரன்கள் மட்டுமே அடித்து 36 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

தொடர்ந்து 8 போட்டிகளில் தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது.